பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63

குலோத்துங்கனை அவர்கள் மூவரும் தத்தம் மக்களுள் ஒருவனாகவே மதித்து, மறம் மானம் முதலாம், மன்னர் மன்னர்க்கு மாண்பு தரும் பண்புகளை ஊட்டி வளர்த்தார்கள். தாங்கள் சென்ற போர்க் களங்களுக்கு அவனையும் உட்கொண்டு சென்று போர் முறைகளை யெல்லாம் புகட்டிப் பெருவீரனாக்கினார்கள். இம் முறைகளால், குலோத்துங்கனும் அரசர்க்கு அமையவேண்டிய அத்தனை பண்புகளையும் ஆரப் பெற்றான்; அம்மட்டோ தன் தாய்ப்பாட்டன் இராசேந்திரன் பெயரையே தன் பெயராக் கொண்ட தன் இரண்டாம் மாமன், இரண்டாம் இராசேந்திரனின் ஒரே மகள் மதுராந்தகியை மணந்து, தன் முன்னோர் முறைப்படியே, சோழர்குல மருமக னாகியும் மாண்புற்றான்.

இந்நிலையில், வேங்கி நாட்டில் அரசோச்சியிருந்த, குலோத்துங்கன் தந்தை, இராசராசசேந்திரன், தன் மகன் மறமாண்புகளில் சிறந்து, மண்ணாளும் தகுதி பெற்று விளங்குவதைக் கண்டான். அவனுக்கு இளங்கோப் பட்டம் சூட்டி மகிழ மனங்கொண்டான். சோணாட்டு அரண்மனையில் வாழ்ந்திருந்த அவனை வேங்கிநாட்டிற்கு வரவழைத்து, தங்கள் நாட்டு வழக்கப்படி, விஷ்ணு வர்த்தனன் என்னும் பட்டப்பெயர் சூட்டி இளவரசனாக்கினான்.

குலோத்துங்கன் வேங்கி நாட்டு இளங்கோவாகம் பட்டம் சூட்டப்பெற்ற சின்னாட்களுக்கெல்லாம், அவன் தந்தை இராசராச நரேந்திரன் இறந்துவிட்டான்;முறைப் படி, வேங்கி நாட்டு ஆட்சியுரிமை, குலோத்துங்கனுக்கே உரியதாகவும், அதை, தான் அடைய வேண்டும் என்ற ஆசை, அவன் சிற்றப்பன் விசயாதித்தனுக்கு இருப்பதை அவன் உணர்ந்தான். ஆண்டு முதிர்ந்த அவன் ஆசையை நிறைவேற்றி தன் வைப்பது கடன் என்ற நல் உள்ளம்