பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
69

வரலாற்று நூலோ ஏதும் கூறவில்லை. ஆனால், வீரராசேந்திரனுக்கு முன் சோணாடு ஆண்ட அவன் முன்னோனாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண் மக்கள் அறுவர் இருந்தனர்; சோணாட்டின் வீர வாழ்விற்குத் துணையாய் அவர்களும் போர் பல புரிந்துள்ளனர்; வெற்றிகொண்ட நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை, இராசேந்திரன் அவர்கள் பால் அளித்திருந்தான் என்று அக்காலக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மூத்தோன் வழிவந்த அவர்கள் இருக்க, இளையோன் வழி வந்த அதிராசேந்திரன் ஆட்சிப்பீடம் ஏறுவது அரசியல் அறமாகாது என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழ, அதனால் தாய் உரிமைப் போர் தலைதூக்க விக்கிரமாதித்தன் இடைபுகுந்து, அவரை அடக்கி, அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்தி இருத்தல் கூடும்; அல்லது சோணாட்டில் தாய் உரிமைப்போர் எதுவும் தோன்றாதிருக்கவும், மூத்தோன் வழி மக்கள் அறுவர் இருப்பதால், அது தோன்றிவிடுமோ என்ற அச்சத்தால் அரியணையேறும் மைத்துனனுக்குத் துணைபுரியச் சோணாட்டிற்கு விக்கிரமாதித்தன் வந்திருத்தலும் கூடும். தன் தோள்வலியை வடநாட்டு வேந்தரெல்லாம் கண்டு வியத்தல் வேண்டும் என்பதில் இருந்த குலோத்துங்கன் வேட்கை, சோணாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வொட்டாது தடுத்துவிட்டது போலும்; அவன் ஆங்குச் சென்றிலன்; ஆனால், அவன் அப்போது சென்றிலனேனும், அது நிகழ்ந்த சின்னாட்களுக்கெல்லாம் செல்ல வேண்டிய நிலைமை தானாகவே வந்தடைந்தது.

மைத்துனன் மேலைச்சாளுக்கியப் பெருவீரன் விக்கிரமாதித்தன் துணையால் சோணாட்டு மன்னனாகிய முடிபுனைந்த அதிராசேந்திரன், சோணாட்டு அரியணையில் ஒரு சில திங்களே வீற்றிருந்தான்; அவன் ஆட்சி ஆறு திங்களே நடைபெற்றது: ஆறாம் திங்களில் அவன் இறந்துவிட்டான். அவன் இறந்தது குறித்துப் பலர் பற்பல