பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80



அந்நாட்டைக்காத்துவந்தனர்; பாண்டி மன்னர்களின் இம் மறவுணர்வை அறிந்துகொண்டமையால் கங்கைகொண்ட சோழன். தன் மக்களையும் பேரன்மார்களையும், பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையிலேயே இருந்து ஆளும் முறையை மேற்கொண்டான். அதனால் பாண்டி மன்னர்களின் விடுதலை முயற்சி ஒருவாறு அடங்கியிருந்தது. இந்நிலையில் சோணாட்டில் வீரராசேந்திரனுக்குப் பிறகு அரியணை ஏறிய அவன் மகன் ஆறு திங்கள் கூட இருந்து ஆளாது இறந்து விட்டான். அரசுக்கு உரியாரைப் பெற மாட்டாது சோணாடு சில திங்கள் அல்லற்பட்டுக் கிடந்தது; இந்நிலையை இனிய வாய்ப்பாகக் கொண்டு, பாண்டி மன்னர் மரபில் வந்த அரசிளங்குமரர் ஐவர், சோணாட்டுப் படைகளைத் துரத்திவிட்டுப் பாண்டி மண்டலத்தை ஐந்து பகுதியாகப் பிரித்துக்கொண்டு அரசாளத் தொடங்கிவிட்டார்கள்.

சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிபுனைந்து கொண்ட குலோத்துங்கன் பாண்டிநாட்டு நிலையை அறிந்தான்; ஆயினும் வடவெல்லையில், விக்கிரமாதித்தன் பெரும் படையோடு காத்திருக்கும் காலத்தில், தென்னாட்டின் மீது படைகொண்டு செல்வது போர் முறையாகாது என அறிந்த குலோத்துங்கன், பாண்டியர்களை, அவர்கள் போக்கில் சிலகாலம் விட்டுவைத்தான் ; வடவெல்லைப் போரை முடித்துக்கொண்டு, விக்கிர்மாதித்தனை வென்று திரும்பியதும் பாண்டிநாட்டின் மீது அவன் பார்வை சென்றது. ஆயினும் பாண்டி நாட்டுப் போரை அப்போதே தொடங்க அவன் விரும்பவில்லை, ஒரு பெரும் போரில் ஈடுபட்டுத் தன் படை பெரிதும் வலி யிழந்து கிடக்கிறது; ஆனால் பாண்டியர்களோ, இந்த இடைக் காலத்தில் தம் படைகளைப் பெருவாரியாகப் பெருக்கி வைத்திருந்தனர்; அதை உணர்ந்திருந்த குலோத் துங்கன், தன் படை பலம் பண்டேபோல் பேராண் மையும், பேராற்றலும் வாய்ந்ததாகுக என ஐந்தாண்டு