பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


பழிக்கும் நீ, நாளை அமர்க்களத்தில் நீயே அறிந்து கொள்வாய்; ஆகவே, கொடுக்கத் தவறிய திறைகளைத் தந்து பணிந்து போவதே நன்று” என அரசியல் முறைகளை எடுத்து ஓதினான்.

அமைச்சன் கூறிய அறிவுரைகளை அனந்தவன்மன் ஏற்றுக் கொண்டானல்லன். மாறாக, அமைச்சன் அறிவுரை கூறக்கூற அவன் சினம் அளவிறந்து பெருகிற்று; அமைச்ச! என்னுடைய தோள்வலியும், என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது, பிறர் போல் உன்னுடைய பேதைமையினால் இவ்வளவும் உரைத்தாய்; பிழையுரை புகன்று பிழை புரிந்துவிட்டாய்;. என் நலன் குறித்துக் கூறும் உன் அறிவுரை, என் பெருமையை அழிப்பதாக அமைவது அறிவுடைமையோ? சிங்கக் குட்டி வாழும் குகை முன்சென்று களிறொன்று பிளிறினால் அச்சிங்கக்குட்டி அஞ்சி அடங்கி விடுமோ? அறிவுரை கூறுவதை விடுத்து, அரணகத்துப் படைகளை உடனே போர்க்களம் புகவிடுக; நாடெங்கும் போர்ப்பறை முழங்கட்டும், நால்வகைப் படை வீரரும், விரைந்து களம் புகட்டும்” என ஆணையிட்டு அமர்மேற் கொண்டான்.

கலிங்கப்படை களம் புகுந்தது; இருபெரும் கடல்கள், எதிர் எதிர் நின்று போரிட்டன; படைக் கலங்களை எடுங்கள்; பரிகளைப் பாய விடுங்கள்; களிறுளைக் களம் நோக்கிப் போகவிடுங்கள்” என்னும் ஒலிகள், கடல் ஒலி போல் ஓவென ஒலித்தன. வில் நாணை இழுத்து விடுந்தொறும் எழும் ஒலியும், வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் காதுகள் செவிடுபடும்படி சென்று ஒலித்தன; காலை கழிந்து மாலை வரவர கலிங்க வீரர்களிடையில் சோர்வு தலை தூக்கிற்று; அந்நிலையில் கருணாகரனும் களம் புகவே, கலிங்கப்படை அறவே அழிய எஞ்சிய சிலரும் பிழைத்தோடத் தலைப்பட்டார்கள். பிழைத்தால் போதும் எனப் புதரிடைப் புகுந்து ஓடியபோது,