பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92



யிலும் விந்தையே, குலோத்துங்கனின் அரசியல் முறை யினை அறிந்திருப்பார்க்கு அது, விந்தையாகத் தோன்றாது. அது, அவன் ஆழ்ந்த அரசியல் அறிவின் வெற்றி யாகவே தோன்றும், மாமன்மார் மூவரும், மேலைச் சாளுக்கிய மன்னர்களோடு துங்கபத்திரை ஆற்றங்கரையில் மேற்கொண்ட நீண்ட பெரும்போரை நேர் நின்று கண்டவன் குலோத்துங்கன், துங்கபத்திரை ஆற்றின் வடகரைக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் தம் அரசு நடைபெற வேண்டும் என்ற ஆரா ஆசை காரணமாக மேற்கொண்ட போரில் மாண்ட சோணாட்டு வீரர்களும், சோழர்குல அரசிளங்குமரர்களும் எண்ணற்றோராவர், அத்துணைப் பேரழிவிற்குப் பிறகும், ஆங்குச் சோழர் ஆட்சியை அமைக்க முடியவில்லை; மேலைச் சாளுக்கிய நாட்டு மக்களும், மாநகர்களும் அழிவுற்றதே கண்ட பயன்; மாமன்மார்களுக்குத் துணையாய் அப்போர்களில் கலந்துகொண்ட குலோத்துங்கன், அம்முயற்சி, பய னற்றது; பேரழிவிற்குத் துணை நிற்பது என்பதை அப் போதே கண்டு கொண்டான்; அதனால், தன் படை பலத்தால் அடக்கி ஆளமாட்டாத் தொலைநாடுகளை வென்றடக்கும் வீண் முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்ற கருத்தைக் குலோத்துங்கன், அந்நாள் தொட்டே வளர்த்து வந்தான்; அம்முயற்சிகளில், மக்களையும், மாநிலங்களையும் அழிப்பதை விடுத்து, நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியை நிலைநாட்டுவதே அரசியல் முறையாம், ஆக்கம் பெருக்கும் வழியாம் என்பதையும் அறிந்திருந்தான். ஆகவே, குலோத்துங்கன், அந்நாடுகள் தன் கை விட்டுப் போனதைத் தோல்வியாகக் கொள்ளாது, வெற்றியாகவே கொண்டான்; வரலாற்றாசிரியர்களும் அதைக் குலோத்துங்கனின் கொற்றமாகவே மதித்து, அவனை மனதாரப் பாராட்டுவாராயினர்.