பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


அதற்கேற்ப, அவற்றின் மீது விதிக்கும் வரிகளின் அளவும் அவ்வப்போது மாற்றப் பெறுதல் வேண்டும் என உணர்ந்தான் குலோத்துங்கன். தன் தாய்வழிப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனின் தந்தையாகிய இராசதிராசன் காலத்தில், சோணாட்டு நிலங்கள் ஒரு முறை அளக்கப் பெற்றன வேனும், அதற்குப் பிறகு மூன்று தலைமுறைக் காலம் கழிந்து விட்டமையால், தன் காலத்தில் ஒரு முறை அளக்கப் பெறுதல் வேண்டும் என்று உணர்ந்தான். அப்பணியைத் திருவேகம்பமுடையான், திருவரங்கத் தேவன் என்ற இரு அரசியல் அதிகாரிகள் பால் ஒப்படைத்தான். அவர்களும் அப்பணியை இரண்டாண்டுக் காலத்தில் செய்து முடித்தார்கள். அப்பெரும் பணியைக் குறைவற முடித்துக் கணக்கெடுத்த அவர்களுக்கு, முறையே, உலகளந்த சோழப் பல்லவரையன், உலகளந்தான் என்ற பட்டப் பெயர்களைச் சூட்டிப் பெரும்ை செய்தான் குலோத்துங்கன்.

கல்விச்சிறப்பு: குலோத்துங்கன், பரணி பாடிய பெரும்புலவரால், “பல்கலைத்துறை நாவில் உறைந்தவன்” என்றும், ‘அறிஞர் தம்பிரான் அபயன்” என்றும் பாராட்டுமளவு பேரறிவு படைத்தவனாவன். கலிங்கத்துப் பரணி என்ற பெயரால் தன் வெற்றியையும், குலோத்துங்க சோழ சரிதை என்ற பெயரால் தன் வரலாற்றையும் இரு பெரும் புலவர்கள் பாடிப் பாராட்டுமளவு புலமையுள்ளமும், புலவர் நட்பும் உடையவன் குலோத்துங்கன். குலோத்துங்கன், கல்விச் சிறப்போடு கலை உணர்வும் உடையான். ஏழிசை பயின்றவன் அவன்; அவ்வேழிசைக்கும் இலக்கணம் காணும் கதையறிவுடையவன், அவன் ஆக்கிய இசை நூலே, அக்கால இசை வல்லார் பின்பற்றிய இலக்கண நூலாம். அவன் இயற்றிய இசை நூலைக் கற்றுத் தேர்ந்து. அதை அவன் கேட்கப் பாடி, “ஏழிசை வல்லபி” எனப் பெயர் சூட்டப் பெற்றாள் குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி. தன்னைப் பாடிப் பரிசில் பெற வரும் பாணர்கள், பாட்டில் தாளப் பிழை

க-7