பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கலிங்க

மூலிகை நமது முதுமையை மாற்றாமலா போய்விடும்; வயது அதிகமானாலென்ன? நமது கெம்பீரம் கெட்டா விட்டது? அதைக் கண்டே அவள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று தவறாக எண்ணினார் அந்த ஏமாளி.

அவள் மேலும் கூறினாள்: "இன்னும் உமது திறமையை நான் பாராட்டுகிறேன். நான் உயிரோடு உங்கள் முன் நிற்பதே உமது அபூர்வ மருந்தின் சக்தியினால்தான் என்பதை உணருகிறேன். உமது உதவியை நான் மறக்கமாட்டேன்." —கிழவன், குமரியின் முகத்தை உற்று நோக்கினான். அந்தப் பார்வை, "உதவி செய்த என்னை உல்லாசப்படுத்து; உன்னை எனக்குத் தந்துவிடு," என்று கேட்டது, அவனது நோக்கு. பிறகு அவர் நினைப்பு யாவும் நொடியிலே தூளாகும்படி, நடனா கூறினாள். "ஆனாலும் உம்மை இனி காதலிப்பது முடியாத காரியம்; என் நெஞ்சை அவரிடம் நான் தந்து நெடுநாளாகிவிட்டன."

வைத்தியருக்கு வலி அதிகரித்தது. விழியிலே கோபம் குதித்தெழும்பிற்று. "அவன் பிரமாதமான வீரன் என்று எண்ணுகிறாய், நடனா! அவன்போல் ஆட்கொல்லிகள் அனந்தம்; என்போல் இதமளிப்போர் இலட்சத்தில் ஒருவர் கூடக் கிடையாது" என்று கூறினார்.

"அரச மன்றத்திலே என்றேனும் ஓர் நாள் உமது அருமையான வாதத்திறமையைக் காட்டுமய்யா; எனக்குத் தெரியாது வாதம் புரிய" என்றாள் மங்கை. "பேதமை—மாதர்க்கு அணிகலமாம்!" என்றார் வைத்தியர். "மருந்துக்காக நீர் பல சுவடிகளைப் படித்திருப்பீர். அது ஏட்டுச்சுரை. எனக்கேன் வைத்தியரே அவை! கேளும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல, என்னை நீர் நாடி வருவதற்கு முன்பு, உமது கீர்த்தி என் காதைத் தேடி வந்தது. என் அன்பர் விஷயம் அப்படியல்ல! அவரை நான் முதலிலே கண்டேன். அவருடைய கீர்த்தி என்னவென்று அப்போது நானறியேன். உமது கீர்த்தியைக் கேட்டு இன்று எங்ஙனம் பாராட்டுகிறேனோ