பக்கம்:கலித்தொகை 2011.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

103


"மடிஇலான் செல்வம்போல் மரன்நந்த, அச்செல்வம்
படிஉண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞிறுஆர்ப்ப,
மாயவள் மேனிபோல் தளிர்ஈன; அம்மேனித்
தாய சுணங்குபோல் தளிர்மிசைத் தாதுஉக,
மலர்தாய பொழில்நண்ணி, மணிநீர்க் கயம்நிற்ப, 5

அலர்தாய துறைநண்ணி, அயிர்வரித்து அறல்வார;
நனிஎள்ளும் குயில்நோக்கி, இனைபுகு நெஞ்சத்தால்
துறந்துஉள்ளார் அவர்எனத் துனிகொள்ளல், எல்லா! நீ
வண்ணவண்டு இமிர்ந்துஆனா வையைவார் உயர்எக்கர்த்
தண்அருவி நறுமுல்லைத் தாதுஉண்ணும் பொழுதன்றோ, 10

கண்நிலா நீர்மல்கக், கவவிநாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்குஅவர் வருதும்என்று உரைத்ததை?
மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ,
‘வலனாகவினை' என்று வணங்கி நாம் விடுத்தக்கால், 15

ஒளிஇழாய்! நமக்கு அவர்வருதும் என்று உரைத்ததை?
நிலன்நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்
புலன்நாவில் பிறந்தசொல் புதிதுஉண்ணும் பொழுதன்றோ,
பலநாடு நெஞ்சினேம், பரிந்துநாம் விடுத்தக்கால்,
சுடர்இழாய்! நமக்குஅவர் வருதும்என்று உரைத்ததை? 20

எனவாங்கு,
உள்ளுதொ றுடையும்நின் உயவுநோய்க்கு உயிர்ப்பாகி
எள்ளறு காதலர் இயைதந்தார், புள்இயல்
காமர் கடுந்திண்தேர்ப் பொருப்பன்,
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே." 25

ஏடி. பெண்ணே! ஊக்கம் குன்றி ஓய்ந்துவிடாதவன் செல்வம் நாள்தோறும் வளர்வதுபோல், மரங்கள் மலர்ச் செல்வத்தால் சிறக்கவும், அவன் ஈட்டிய செல்வத்தை, அவனால் படியளிக்கப் பெற்ற பெரியோர்கள் இருந்து உண்பது போல், மலர்களில் அமர்ந்து, தேனை உண்டு வண்டுகள் ஆரவாரிக்கவும், கரியவள் மேனிபோல, மரங்கள் இளந்தளிர்களை ஈனவும், அம்மேனி மீது பொன்னிறத் தேமல்கள் படர்ந்தது போல், அத்தளிர்கள் மீது பொன்னிறப் பூந்தாதுகள் உதிரவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/104&oldid=1756370" இலிருந்து மீள்விக்கப்பட்டது