பக்கம்:கலித்தொகை 2011.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மா. இராசமாணிக்கனார்


வாரார், தோழி! நம் காதலோரே;
பாஅய்ப், பாஅய்ப், பசந்தன்று நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்;
நனிஅறல் வாரும் பொழுதுஎன, வெய்ய
பனிஅறல் வாரும் என் கண்; 15

மலையிடைப் போயினர் வரல்நசைஇ, நோயொடு
முலையிடைக் கனலும்என் நெஞ்சு;
காதலிற் பிரிந்தார்கொல்லோ? வறிதோர்
தூதொடு மறந்தார்கொல்லோ? நோதகக்
காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? 20

துறந்தவர் ஆண்டாண்டு உறைகுவர் கொல்லோ, யாவது?
நீளிடைப் படுதலும் ஒல்லும்; யாழநின்
வாள்இடைப் படுத்த வயங்கீர் ஓதி!
நாள்அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து
கேள்வி அந்தணர் கடவும் 25

வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சு!”

தோழி! அஞ்சத்தக்க ஆற்றல் உடையவனும், கலப்பைப் படை உடையோனும் ஆகிய வெண்ணிற மேனி பெற்ற பலதேவனுக்குரிய துழாய் மாலைபோல் வெண்கடப்ப மரத்தின் கிளைகளில் கூட்டமாய் வாழும் மயில்கள் ஆரவாரிக்கும் அழகு உண்டாகவும், முறுக்கற இழுத்து நீட்டிய யாழ்நரம்பு இசைப்பதுபோல், வண்டுகளும் கரும்புகளும் ஆரவாரப் பேரொலி எழுப்பவும், பாடிப் பரிசாகப்பெற்ற தொடி விளங்கும் கையினை உடையளாகிய விறலியரின் இனிய வாய்ப்பாட்டுப் போல், தும்பிகள் வந்து ஒலி எழுப்பவும், குளத்தை அடுத்திருக்கும் பூஞ்சோலையின் எல்லா இடங்களிலும், இசைக் கருவிகள் ஒன்று கூடி இசை எழுப்பியது போல், 'இம்' எனும் ஓசையுடைய வாய்த்தேனீக்கள் மலர்களை ஊதவும், மரங்கள் ஒவ்வொன்றும் தம் மலர்களைச் சூடவல்ல மகளிரையும், அவர் மனம் விரும்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/107&oldid=1756873" இலிருந்து மீள்விக்கப்பட்டது