பக்கம்:கலித்தொகை 2011.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

113


'ஒண்குழாய்! செல்க' எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்."

கருநீல மலர்போல் மைதீட்டிய கண்களை உடையவளே! நான் கூறும் இதைக்கேள்: ஓர் இளைஞன், தலைமாலை அணிந்து, கையில் வில்லேந்தி விலங்குகளின் காலடிச் சுவடுகளைத் தேடி வருபவன் போல் வருவான்; என்னைப் பார்த்ததும், என்னிடம் ஏதோ கூறத்தொடங்கி முடியாமையால் பெரிதும் வருந்துவான்; அதையும் வாய் திறந்து கூறமாட்டாமல் முகக்குறிப்பால் காட்டிவிட்டு, வறிதே வீடு திரும்புவான். இவ்வாறு நடைபெறுவது ஒரு நாள் இருநாள் அன்று; பலநாள். அவன்தான் இவ்வாறு வருந்துகிறானோ என்றால், இல்லை! என்னிலையும் அன்னதே! அவனோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நானும், அவனைக் குறித்து வருந்தத் தலைப்பட்டேன். அவ்வருத்த மிகுதியால் உறங்குவதும் அற்றுப் போயிற்று!

அவனோ, என் முன்னே வந்து நின்று தன் குறையைத் தானே கூறுவதைச் செய்திலன்; உன் துயர் கண்டு நானும் வருந்துகிறேன் எனக் கூறுதல் பெண் தன்மையன்று, ஆதலின் நானும் ஏதும் கூறவில்லை. இதனால், அவன்மீது நான் காதல் கொண்டு விட்டதை அவன் அறியாமல் இறந்து விடுதலும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் உண்டாகவே ஒருநாள், காதல் நோய்க் கொடுமையால், துணிந்து, நாணமற்ற ஒரு செயலைச் செய்து விட்டேன். நாம் காவல் கொண்டிருக்கும் நம் தினைப்புனத்திற்கு அருகே, ஒருநாள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அவன் அங்கு வந்தான். அவனைப் பார்த்து, 'ஐய! என்னைச் சிறிது ஆட்டு' என்றேன். 'தையால்! நல்லது ஆட்டுகிறேன்' எனக்கூறி ஆட்டத் தொடங்கினான்; ஆடிக்கொண்டே இருந்த நான் கைநழுவி விழுந்து விட்டவள் போல் நடித்து, அவன் மார்பில் விழுந்தேன். நான் உண்மையிலேயே கை நழுவி விழுந்து விட்டேன் என நம்பி, அவன், என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். மயக்கம் தெளிந்து எழுந்து விட்டால், 'உயர்ந்த குழை அணிந்தவளே! எழுந்து செல்' எனக்கூறி உடனே அனுப்பி விடும் உயர்ந்த பண்பாடு உணர்ந்தவன் ஆதலின், அவன் மார்பில் விழுந்து கிடப்பவள் போல் நெடும்பொழுது விழுந்து கிடந்தேன். என் செயல் குறித்து நீ யாது எண்ணுகின்றாய்?

கயம்-குளம். தொடை மாண்ட-மாண்புறக் கட்டப்பெற்ற. நோக்குபு-நோக்கி. முன்னம்-குறிப்பு. உரைக்கல்லான்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/114&oldid=1759160" இலிருந்து மீள்விக்கப்பட்டது