பக்கம்:கலித்தொகை 2011.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மா. இராசமாணிக்கனார்


மகளிர் இது பிறிதொரு காரணத்தால் வந்தது எனக்கருதி மயங்காது இது, இவள் கணவனால் வந்தது எனக்கூறிப் பாராட்டத் தக்க பெருவழி இருக்குமானால், அதை யாம் அறியக் கூறிச் செல்வாயாக!

உன்னைக் காண முடியாமையால், அறநெறியைக் கைவிட்டு வாழ்ந்து, வறிதே வயது முதிர்ந்த ஒருவன், மறுமைச் செல்வத்தையும் இழந்து சீரழிவது போல் அழகிழந்தவள், நீ, வழியில் வாழும் கானவர், கொலை கொள்ளைகளில் குறைவின்றித் திருந்திய அறிவுடையவர் ஆவர் என அறிந்தும் அஞ்சாது வரக் கண்டதும் விடியற்காலையில் துயில் நீத்து எழுந்ததும் அன்று செய்ய வேண்டிய கடமைகளைக் கருத்தோடு எண்ணி முடிவு செய்யும் ஒருவன் செல்வம், சீர் பெற்றுச் சிறப்பது போல் சிறந்த அழகைப் பெறுவாள். அவ்வாறு பெறும் அழகால், புறங்கூறும் ஊர்ப் பெண்கள் வாயை நிலையாக அடக்கவல்ல வழியிருக்குமாயின் அதை எங்களுக்கு அறிவிப் பாயாக!

- என்று கூறக்கேட்ட தலைவன், வேங்கை மலர்ந்து காட்டும் மணநாளை எதிர்நோக்கியிருந்து, உன் தோளை மணந்து கொள்ள வருகின்றான். ஆகவே, இனி உன் வருத்தம் ஒழிவதாக!

வாங்கிய-வளைத்த. உழத்தல்-வருந்துதல். நீடு இரு விடர் அகம்-நீண்டபெரிய மலையின் பிளவுகள். சிலம்ப-எதிரொலிக்க. புய்க்கல்லாது-பிடுங்கமாட்டாமல். தெருளாமல்-உணராமல். மறம் திருந்தார்-கொலைத் தொழிலைக் குறைவறப் பெற்ற கானவர்.

உள்ளுறை : மலர்ந்து மணம் வீசும் வேங்கையைப் புவியெனக் கருதியது, இல்லற இன்பம் பெறத் துணைசெய்யும் தோழியின் அறிவுரையைக் களவு இன்பத்தை இழக்கச் செய்வதால், கொடிதெனக் கருதுதலாம். யானை வேங்கையை அழிக்க எண்ணுதல், தலைவன் தோழியின் வரைவுகடாய் கூற்றை மறுக்கத் துணிதலாம்; கோட்டினைப் பிடுங்க முடியாமல் கூவி அழுதல், அவள் கூற்றைக் கொடுமை உடையதாகக் கருதியதை மாற்றிக் கொள்ளமுடியாமல், தலைவன் வருந்திக் கூறலாம்.

3.உண்கணும் பொலிக!

காட்டு நாட்டில் பிறந்த ஒரு காளை, மலை நாட்டில் பிறந்த மங்கையொருத்தியை ஒருநாள் பார்த்தான். இருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/117&oldid=1759629" இலிருந்து மீள்விக்கப்பட்டது