பக்கம்:கலித்தொகை 2011.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

121


வகுத்தும் கூறவல்ல சான்றோரை உடன் அழைத்துக்கொண்டு, உன் தோளின் தளர்ச்சியும், ஊர்ப் பெண்கள் ஓயாது கூறும் பழிச்சொல்லும், கனவில் மட்டுமே கூடிக்களிக்கலாகும் துயர் நிலையும் ஒருசேர அழியும்படி, காதலன் வரைந்து கொள்ள வந்து விட்டான். இனி, உன் கண்கள், மலர் போன்ற தன் அழகை மீண்டும் பெற்று மகிழுமாக!

காமர்-விருப்பம் தரும். நாகம்-புன்னை. போதந்தான்-வந்தவன். இதணம்-பரண். இறால்-தேனடை. வாங்கு அமை-வளைந்த மூங்கில். தெருமந்து-மனம் கவன்று. நனவிற் புணர்ச்சி-நாடறிய நடைபெறும் திருமணம். கனவிற் புணர்ச்சி-கனவிற் கண்ட திருமணம். நெறியறி-கணிநூல் கூறும் முறை அறிந்த. செறிகுறி-மணமக்கள் இருவர் கூடுதற்குரிய நல்லநாள். புரிதிரிபு-தவறுதல். அறிவன்-கணி கூறுவோன். மாயப் புணர்ச்சி-கனவில் கண்ட திருமணம்.

உள்ளுறை: ஒளிபொருந்திய திங்கள், புகையால் மறைக்கப் பட்டு, மழுங்கித் தோன்றுவதால், அதைக் கைப்பற்றிப் பயன்கொள்ளக் கருதுதல் போல், புகழ்மிக்க தலைவனும், அருட்குணத்தால் ஆற்றில் பாய்ந்து அவளைக் காப்பாற்றியதால் எளியவன்போல் காட்சி அளிப்பது கருதி, அவனை மணந்து கொள்ளக்கருதினர் என உள்ளுறை உவமம் கொள்க.

4. உவகையன் புகுதந்தான்!

ரு நம்பியும் ஒரு நங்கையும் காதல் கொண்டனர். தொடக்கத்தில், அவளைக் காண ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்த அவன், நாள் ஆக ஆக, வருகையைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதனால் அவள் வருந்தினாள். திருமணம் நிகழ்ந்துவிட்டால் இருவர் மனக்குறையும் தீர்ந்து விடும் என, உணர்ந்தாள் தோழி. ஆனால், அதை அவனுக்கு அறிவிக்க இருவரும் நாணினர். அதற்கும் ஒரு வழி கண்டாள் தோழி. ஒருநாள் இருவரும் உலக்கைப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவன் அங்கு வந்து சேர்ந்தான். அதைக்கண்டு கொண்ட இருவரும் தம் பாட்டின் பொருளை மாற்றிக் கொண்டனர். தோழி அவனைப் புகழ்ந்து பாடினாள். அப்பெண் அவனைப் பழித்துப் பாடினாள். பாட்டின் பொருளைக் கேட்ட அவன், அவர் மனக் கருத்தை அறிந்துகொண்டான். மணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/122&oldid=1761963" இலிருந்து மீள்விக்கப்பட்டது