கலித்தொகை - குறிஞ்சிக் கலி
123
தன்மலைபாட நயவந்து கேட்டருளி,
மெய்ம்மலி உவகையன் புகுதந்தான், புணர்ந்துஆரா
மென்முலை ஆகம் கவின்பெறச்
செம்மலை ஆகிய மலைகிழவோனே."
தோழி: பெண்ணே! நாம் ஓர் அகவல் பாட்டுப் பாடியவாறே உலக்கை குற்றுவோம் வருக!
தலைவி: நன்று; தோழி! தினைப்புனத்தில், நல்ல மகளிர் நாணித் தலைவணங்கி நிற்பது போல், முற்றித் தாழ்ந்த கதிர்களை உருவி, சந்தன உரலில் இட்டு, முத்துக்கள் தோன்றுமளவு முற்றிய யானைக் கொம்பாகிய உலக்கைகளால் மாறி மாறிக் குற்றியவாறே, காம நோயை அளித்தவனுடைய மலையை வாழ்த்தி, அகவல் பாட்டைப் பாடுவோம். வருக!
தோழி: அழகிய நெற்றியும், அழகு செய்யப் பெற்ற கூந்தலும், மூங்கில் போல பருத்த தோளும், மலர் மணம் நாறும் மயிரும் உடைய பெண்ணே! அவனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாட்டை நான் முன்னே பாடுகிறேன்; உலர்ந்த மூங்கில்கள் ஒலிக்கும், குகைகள் நிறைந்த அவன் மலையைப் பழிக்கும் ஒரு பாட்டை நீ பின்னர்ப் பாடுவாயாக!
உற்றார் உறவினர்க்கு உண்டாகும் துன்பத்தைத் துடைக்கும் தலைவனுக்குரிய மலையில், முருகனைத் தொழக் கூப்பிய குறமகளிரின் கைகள் போன்ற தேன் நிறைந்த காந்தள் மலர்க் கொத்துக்கள் அத்தேன் சொட்டுமாறு காற்றில் அசையா நிற்கும்.
தன்னைக் காதலித்த மகளிர். தன்னோடு கூடி மகிழ்ந்த மையால் தம் இயற்கை அழகு இழந்து வருந்தினால், அவரைக் காட்டிலும் அதிகமாக வருந்தும் தலைவனுக்குரிய மலை, ஆண் குரங்கு தான் காதலித்த மந்தியை மணந்து கொள்ள வேண்டும் என்ற நல்லறிவு பெற்று, குரங்குக்கூட்டத்தை அடைந்து, மந்தியை எனக்கு மணம் செய்து தாருங்கள் எனக் குறை கூறும் சிறப்பினை உடையது.
பெண்ணே! இதுவரையில் அவனைப் புகழ்ந்து நான் பாடினேன். இனி, காம்பு மறையுமாறு நெருங்க மலர்ந்த மலர்களை நிறையக் கொண்ட தாழ்ந்த கிளையில் தழைத்த தளிர்போன்ற நம் மேனி அழகு இழந்து அழியுமாறு; காதல் நோயைத் தந்தவனுடைய மலையைப் பாடும்பொழுது, அவனைப் பழித்துப் பாடுவோமாக! அதை நீ பாடு.