பக்கம்:கலித்தொகை 2011.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மா. இராசமாணிக்கனார்


தோழி: பெண்ணே! நீ வாழ்க! நம்மீது கொண்ட அருளை மறந்த, நாணம் இல்லாதவன் மலையாயிருந்தும், அது பக்க மலைகளில் பாய்ந்து விழும், வெண்ணுரை தெளிக்கும் அருவிகளைப் பெற்றுள்ள அதிசயத்தை நீ காண்பாயாக!

தலைவி: தன்பால் வந்த வழக்கின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கத்தில் சாய்ந்து விடாது நேரே நிற்கும் துலாக்கோல்போல், நடுநிலைமையில் நின்று அறம் வழங்கும் உள்ளம் உடையோனாகிய நம் தலைவன், தன்பால் அன்பு கொண்டவரின் உள்ளம் உடைந்துபோக அவரைக் கைவிடுவானோ?

தோழி: நம்மீது அருள் காட்டாமல், வீணே அருள் அல்லாத செயல்களிலேயே ஈடுபட்டுத் திரிவோனுக்குரிய மலையாய் இருந்தும், குளிர்ந்த, மணம் வீசும் கோங்கு மலர்ந்து தோன்றும் அது, பொன்னணி பூண்ட யானை போல் காட்சி அளிக்கிறதே. அஃது என்ன வியப்போ?

தலைவி: தன் மலைச்சுனை நீரைக்காட்டிலும் குளிர்ந்த அருள் உள்ளம் கொண்டு, தன்னை விரும்பி வருவார்க்குத் தேர் கொடுக்கும் கொடையாளனாகிய நம் தலைவன், நான் பெருந்துயர் கொள்ள என்னைக் கைவிடுவானோ?

தோழி: அணிந்த அணிகள் தாமே கழன்று போகுமாறு, நம் உடல் தளரத் துயர் தந்தவன் மலையாய் இருந்தும், அம்மலையுச்சியில் கட்டப்பெற்றுள்ள தேன்கூண்டு, மேகத்திடையே நுழைந்து செல்லும் மதிபோல் தோன்றுகிறதே. இது என்ன வியப்போ?

தலைவி: தோழி! என் உள்ளம் கவர்ந்த கள்வனாகிய நம் தலைவன், அஞ்சவேண்டிய பழிபாவம் கண்டு அஞ்சாத அறமுறை அறியாதவன் அல்லன். ஆகவே, எதையும் ஆராய்ந்து பார்க்காது அவனைப் பழித்துப் பேசாதே!

இவ்வாறு நாங்கள் பாட, மறைந்து நின்று கேட்ட தலைவன், தன் வருகையை எனக்கு அறிவிக்காவண்ணம் தோழிக்குக் கையாட்டிவிட்டு, பின்புறமே வந்து என் கழுத்தைத் தழுவிக் கொண்டான்; அவ்வளவே! என்னைப் பற்றியிருந்த பசலை, ஞாயிற்றைக் கண்டதும் மறைந்தோடும் பனிபோல் பறந்தோடி விட்டது!

மறம்-வீரம். இரும்-பெரிய. தொன் முரண்-பழம்பகை. குளகு-தழை உணவு. கறங்கு-ஒலிக்கின்ற. ஒலி-அருவி ஒலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/131&oldid=1765878" இலிருந்து மீள்விக்கப்பட்டது