கலித்தொகை - குறிஞ்சிக் கலி
135
இனையனதீமை நினைவனள் காத்துஆங்கு
அனையரும் பண்பினால், நின் தீமை காத்தவள்,
அருந்துயர் ஆரஞர் தீர்க்கும்
20
மருந்தாகிச் செல்கம் பெரும! நாம் விரைந்தே."
ஞாயிற்றின், இளங்கதிர்களால் அழகு பெறும் பெரிய மலைச்சாரலில், எதிர் எதிராக உயர்ந்து நிற்கும் இரண்டு பெரிய மலை உச்சிகளிலிருந்து 'ஓ' என அதிரும் ஓசையோடு வரும் அருவி, அழகிய கிளைகள் மீது விழ, முற்றிய பூங்கொத்துக்களை வரிசை வரிசையாகப் பெற்ற பருத்த அடியினையுடைய வேங்கை மரம் நிற்கும் நிலை, வரி விளங்கும் நெற்றியினையுடைய அழகிய இரு யானைகள், இருபக்கத்திலும் நின்று, பூவோடு கலந்த நீரைச் சொரிய மலர்ந்த தாமரை மலரில், திருமகள் தெய்வச் சிறப்போடு வீற்றிருப்பதுபோல் விளங்கித் தோன்றும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே!
அவளை மறந்துவிட்ட உன் அருளற்ற செயலை, நான் அறிந்தால் உன்னைப் பிறர்முன் பழிப்பேன் என்று அஞ்சி, காதல் நோய் பெருகிய காலத்திலும், அக்கொடுமையை எனக்கும் அறிவிக்காது மறைத்துவிட்டாள்.
அவளை மறந்துவிட்ட அருளற்ற செயலைத் தன் சேரியில் வாழ்வார் அறிந்தால், அவர்கள் நிலையான கொள்கையில்லாதவன் என்று உன்னைப் பழிப்பர் என நாணி, காமநோய் அளவிறந்து பெருகித் துன்பம் செய்த போதும் அக்கொடுமையை அவரும் அறியாதபடி மறைத்து விட்டாள்.
அவளை மறந்து விட்ட உன் அருளற்ற செயலை உடனாடும் தோழியர் அறிந்தால் அவர்கள் உன் பண்பற்ற செயலைப் பிறர் முன் கூறிப் பழிப்பரே என நாணி, காமநோய் வருத்த வருந்திய காலத்திலும், அக்கொடுமையை அவரும் அறியாதபடி மறைத்துக்கொண்டாள்.
பெரும! இவ்வாறு, உனக்கு நேர இருந்த பழி முதலாம் தீமைகளைக் காத்தல் தன் கடன் என அறிந்து காத்து, அச்செயலால் உனக்கு உண்டாகும் தீமைகளைக் காத்தவளுடைய, தீர்த்தற்கு அரிய துன்பத்தைச் செய்யும் கொடிய காமநோயைத் தீர்க்கும் மருந்தாகுமாறு, வரைவிற்குரிய முயற்சிகளோடு விரைந்து செல்வோம். வருக!