கலித்தொகை
கடவுள் வாழ்த்து
ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து,
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்,
கூறாமல் குறித்ததன்மேல் செல்லும், கடுங்கூளி
மாறாப்போர், மணிமிடற்று, என்கையாய்! கேள் இனி:
படுபறை பலஇயம்பப் பல்உருவம் பெயர்த்து நீ
5
கொடுகொட்டி ஆடுங்கால் கோடுஉயர் அகல்அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ?
மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணைஎழில் அணைமென்தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ?
10
கொலைஉழுவைத் தோல்அசைஇக் கொன்றைத்தார்
சுவல்புரளத்
தலைஅங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
முலைஅணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ? எனவாங்கு,
பாணியும் தூக்கும் சீரும் என்றிவை
மாணிழை அரிவை காப்ப
15
வாணமில் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி பாடி.
வீட்டுலக இன்பத்தை அடைதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து காணும் அந்தணர்க்கு, அரிய நுண்பொருள் பலவற்றைப் பலவகையாக எடுத்து விளக்கி, தெளிந்த வானத்து நீராகிய கங்கை நீரைச் சடையில் ஏற்று மறைத்து, முப்புரத்தில் தீமூட்டி, அப்போர் குறித்து வாய் திறந்து ஒன்றும் கூறாமல், அனைத்தையும் மனத்திலேயே அடக்கிச் செல்லும், பேய்த் தொழில்போல் பெருங்கேடு விளைத்தற்குக் காரணமாகிய அழியாப் பெரும் போரையும், நீலமணி போலும் கண்டத்தையும், எட்டுக்கைகளையும் உடையாய்! கேள்.