பக்கம்:கலித்தொகை 2011.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை

23


பாலைத் திணை

காடும், கடலும், மலையும், மடுவுமாகக் காட்சியளிக்கும் நிலவகை நான்கனுள், காடும் மலையும், மழையற்ற கோடையில் தம் வளங்களை இழந்து வறண்டு போவதால் தம் பெயரையும் இழக்கும்; பாலை எனும் புதுப்பெயர் பெறும். அந்நிலத்தில், அக்காலத்தில் வாழும் மக்களும் வேடுவர், மறவர் என்றும், எயினர் என்றும் அழைக்கப் பெறுவர். அம்மக்கள், உயிர் ஓம்பும் உயர்ந்த தொழில் எதையும் அறியமாட்டாமையால் வழிப்பறித் தொழிலை மேற்கொண்டு வயிறு வளர்ப்பர்.

இளைஞன் ஒருவன் தான் காதலித்த ஒரு பெண்ணை, அவள் பெற்றோர் தனக்கு மணம் செய்து தாரார் என அஞ்சி அவளை அழைத்துக்கொண்டு ஓடிவிடுவதும், அப்பெண்ணை அவள் தாய்தேடி அலைவதும், மணந்து வாழும் காதலன் காதலியருள் காதலன், கல்வி, பொருள், கடமை குறித்து வெளிநாடு செல்லக் கருதுவதும், அஃதறிந்து காதலி வருந்துவதும், வெளிநாடு செல்லும் அவன் இடைவழியில் அவளை நினைந்து வருந்து வதும், காதலன் சென்றபின், காதலி காட்டுவழியின் கொடுமையை நினைந்து வருந்துவதும் ஆகிய பொருள் தோன்றப்பாடப் பெறும் பாடல்கள் எல்லாம் பாலைத் திணைப் பாடல்களாகும்.

பாடிய புலவர்

பாலைபாடிய பெருங்கடுங்கோ

கலித்தொகையுள், பாலைத்திணைபற்றிய பாக்கள் முப்பத்தைந்தையும் பாடியவர், பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவர். இவர் மூவேந்தர் குடியுள் சேரர் குடியில் பிறந்தவராவர். பாக்களில் பாலைத்திணைபற்றிய பாடல்களை நயம்படப் பாடிய சிறப்பறிந்து, அக்கால மக்கள் அவருக்குப் பாலைபாடிய என்ற அடைமொழியை அளித்துப் பாராட்டி உள்ளனர். இவர் பாராண்டவர்; பாவல்லவர்; புலவரும் போற்றும் புகழும் பெற்றவர். பேய்மகள் இளவெயினி என்ற பெண்பாற் புலவர் இவரையும், இவர் நாட்டையும் பாராட்டிப் பாடியபாட்டு, புறநானூற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/24&oldid=1685096" இலிருந்து மீள்விக்கப்பட்டது