பக்கம்:கலித்தொகை 2011.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

29


கொடுத்து உதவ முடியாதிருப்பது இழிவாகும் என்று எண்ணி, மலை பல கடந்து சென்று தேடக் கருதியசெல்வம், சிறந்த செல்வமே ஆயினும், நீ கூறும் கட்டளை வழி நிற்கும் கற்பும், நீ பிரிந்து விட்டால் உயிர் வாழ மாட்டாத காதலும் உடையவளாகிய உன் மனைவியைப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லது, அவளைப் பிரிந்து போய்ச் சேர்க்கும் செல்வம் சிறப்புடைய செல்வம் ஆகுமோ? ஆகாது.'

'வாழ வழியில்லை என வறுமை கூறி வந்து இரப்பவர்க்குக் கொடுக்க மாட்டாமல் நாமும் வருந்துவது நமக்கு இழிவாகும் என்று எண்ணிக் கற்கள் மலிந்த காட்டு வழியைக் கடந்து சென்று சேர்க்கக் கருதிய செல்வம் சிறந்த செல்வமே; ஆயினும் பண்டு கொண்ட காதல் கெடாவண்ணம் வாழ்க்கைத் துணையாய் வாய்ந்த உன் மனைவியின், தழுவ மகிழ்ச்சிதரும் மார்பைப் பிரியாதிருப்பதே பெருஞ் செல்வம் ஆகுமே அல்லது, அவளைப் பிரிந்து போய்ச் சேர்க்கும் செல்வம், சிறப்புடைய செல்வம் ஆகுமோ? ஆகாது.'

'வாழ இடம் இல்லாமையால் வந்து இரப்பவர்க்குச் சிறிதேனும் கொடுக்க மாட்டாமை இழிவாகும் என்று எண்ணிக் காட்டைக் கடந்து போய்ச் சேர்க்கக் கருதிய செல்வம் சிறந்த செல்வமே; ஆயினும் அருந்ததி போல், மகளிராலும், வணங்கி வழிபடத்தக்க கற்புடைய உன் மனைவியின் பருத்த மெல்லிய தோள்களைப் பிரியாதிருப்பதே பெருஞ் செல்வம் ஆகுமே அல்லது அவளைப் பிரிந்து போய்ச் சேர்க்கும் செல்வமும் செல்வம் ஆகுமோ? ஆகாது.'

- என்று நான் உனக்குக் கூறுமாறு, இவள் துன்பம் கொண்டு துயர் உறவும், நீ பொருள் தேடிப் போவது அன்புடையார் செய்யும் செயல் ஆகாது" என்று நான் சொல்ல, என் அறிவுரைக்கு அடங்கித் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாத அவர், பாகர் குத்துக் கோலால் குத்தி அடக்கவும் அடங்காது மதம் பட்டுத்திரியும் யானை, யாழிசையைக் கேட்டதும் அடங்கி விடுவதுபோல், பிரிந்தால் உன் பேரழகு பாழாகும் என்று கூறக் கேட்டவுடனே அஞ்சி, உன்பால் அன்புகொண்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் கருத்தைக் கைவிட்டு விட்டார். ஆகவே, கலங்காதே!

தொடங்கற்கண்-உலகம் தோன்றிய காலத்தில். முதியவன்-நான்முகன். அடங்காதார்-பகைவர். மிடல்-வலிமை. மடங்கல்-எமன். அவுணர்-அரக்கர். கடந்து அடுமுன்பு-எதிர் நின்று அழிக்கின்ற ஆற்றல். மூ எயில் - இரும்பு, பொன், வெள்ளியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/30&oldid=1689581" இலிருந்து மீள்விக்கப்பட்டது