பக்கம்:கலித்தொகை 2011.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மா. இராசமாணிக்கனார்


'நீ, இவளோடு சேர்ந்திருப்பதை விடுத்துப் பிரிந்து போவதை எண்ணுவையாயின், இவள் இறந்து விடுவாள் என்று பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், அதை ஏற்றுக்கொள்ளாது போவதற்கு வேண்டிய வழி முறைகளையே ஆராய்ந்து பார்க்கின்றாய். ஆனால், துணிந்து நீ செல்லும் அவ்வழியில் மரம் அழகிழந்து அழிய, வதங்கி வாடும் அதன் தளிர்கள், ‘எமக்கு முதலாகிய மரம் அழிய, யாம் அழிவதுபோல், தனக்கு முதலாகிய நீ அகல உன் மனைவியும் அழிந்து விடுவாள்' எனக் கூறாமல் கூறித் தடை செய்யும்!'

- எனப் பலப்பல கூறி நான் உன்னைத் தடுக்கவும், நீ என் அறவுரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி என்னைப் போல் அடங்கி விடாமல், உன்பால் அருள் உள்ளம் கொண்டு உனக்கு மேலாய் நின்று, உறுதி பயக்கும் உண்மைகளை இடித்துக் கூறும் நண்பர்களைப் போல், நீ செல்லும் காட்டு வழிக் காட்சிகளே, அறிவுரைகளைக் கூறாமல் கூறி உன்னைத் தடுக்குமாக!

அயல்-அயலில் உள்ளார். வறன்-நீர் அற்ற தன்மை. இறை-முன் கை. இதழ்-கண்ணிதழ். பனி-கண்ணீர். புல் என்ற-அழகு இழந்த. விறல்நலன்-பேரழகு. உடை இவள்-உன்னை உயிராக உடைய இவள். எம-யாம் கூறியனவற்றை. கடைஇய-செலுத்திய. ஆற்றிடை-வழியில். அடை-இலைகள். தகைப்பன-தடுத்து நிறுத்தவல்லன. வல்லை-விரைந்து. வகை-அழகு. ஒல்லாங்கு-பொருந்தும் வகையில். இறைஞ்சிய-தாழ்ந்துபோன. பணிபு-பணிந்து. பல சூழ்வாய்-போதற்கு வேண்டுவனவற்றையே எண்ணுகின்றனை. ஆனாது-அமையாது. அருள் வந்தவை-அருள் நிரம்பிய காட்சிகளை. மெய்-உண்மை உரைகளை. கேளிர்-உறவினர். தகைப்ப-தடுக்கும்.

3. இனிச் செலவு ஒழிக!

ணந்து மனையறம் மேற்கொண்ட இளைஞன் ஒருவன் பொருளீட்டி வரும் கருத்துடையனாய் வெளிநாடு செல்ல விரும்பினான்; கருதியவன், தன் கருத்தைத் தன் மனைவியின் தோழிபால் மெல்ல வெளிப்படுத்தினான். அது கேட்ட தோழி, அவன் கருத்தை அவன் மனைவி அவன் கூறாமுன்பே அறிந்து

கொண்டிருப்பதையும் அறிந்து அவள் வருந்துவதையும் கூறி, அவனைத் தடை செய்தது இது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/33&oldid=1737217" இலிருந்து மீள்விக்கப்பட்டது