பக்கம்:கலித்தொகை 2011.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மா. இராசமாணிக்கனார்


வழிப்போக்கர், ஆறலை கள்வர் ஏவிய சுரையோடு கூடிய அம்பு தம் உடம்பில் தைக்க உடல் தளர்ந்து, நீர் வற்றிப் போவதால், வறண்டு போகும் நாவிற்குத் தண்ணீர் பெறமுடியாத, தணியாத துன்பத்தை, அவர் அழுது சிந்தும் கண்ணீர் நாவறட்சியை நீக்கிப் போக்கும் கொடுமையுடையது நான் செல்லும் காட்டு வழி' என்று கூறிக் காட்டின் கொடுமையைக் காரணம் காட்டி என்னை விட்டுப் பிரிய நினைக்கின்றீராயின், நீர் என் இயல்பை அறியாதவரே ஆவீர்; அவ்வாறு அறியாதவர் போல, இவ்வாறு கூறின், பெரியோய்! உமக்குப் பெருமை ஆகாது. நம் இருவரிடையே நிலைபெறும் அன்பு அழிந்து விட நினையாது, செல்லும் வழியில், நுமக்கு ஆங்கு நேரும் துன்பத்தைப் போக்கும் துணையாகவாவது, அத்துன்பத்தை உடனிருந்து அனுபவிக்கும் துணையாகவாவது கருதி உம்மோடு என்னையும் கொண்டு செல்ல நினைப்பதல்லாது, எனக்கு இன்பம் தரக்கூடியது வேறு உளதோ? இல்லை. ஆகவே, என்னையும் உடன்கொண்டு செல்வாயாக!

மரை ஆ-காட்டுப் பசு. மரல்-கற்றாழை இனத்தைச் சேர்ந்த ஒரு வகைச்செடி. சுரை-மூட்டுவாய். மூழ்க-அழுந்த. சுருங்கி-உடல் தளர்ந்து. புரையோர்-ஆறலைகள்வர். உள்நீர்-வயிற்றகத்து நீர். புலர்வாடும்-நீர் வேட்கை மிக்க; வறட்சி கொண்ட. என் நீர்-என் இயல்பு. நின் நீர-நின் இயல்பிற்கு ஏற்ற. அன்பு அறச் சூழாது-அன்பு அறும்படி விட்டுப் பிரிதலைக் கருதாது. நாடின்-உடன்கொண்டு செல்வதை நினைப்பின்.


6.உயிர்தருதல் ஆற்றுமோ?

வெளிநாடு சென்று பொருள் ஈட்டி வர விரும்பினான் ஒருவன். விரும்பியவன், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான். அதை அறிந்துகொண்டாள் அவன் மனைவி; அவளைப் பிரிவுத் துயர்பற்றிக் கொண்டது. அவள் துயர் அறிந்த அவள் தோழி, அவனிடம் சென்று, 'பிரிவதற்கு முன்பே வருந்தும் உன்மனைவி, பிரிந்தால் உயிர் வாழாள்; ஆகவே போகாதே' எனக் கூறியது இது.

"வேனில் உழந்த வறிது உயங்கு ஓய்களிறு
வான்நீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர் எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ ஐய, சிறிது?
நீயே, செய்வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழநின் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/39&oldid=1737219" இலிருந்து மீள்விக்கப்பட்டது