பக்கம்:கலித்தொகை 2011.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

43


நோக்கிவரும் விருந்தினரை ஓம்பி, மனைக்கண் மனைவி மகிழுமாறு அவளோடு கூடிப் பிரிவின்றி வாழும் வாய்ப்பு உண்டாயின், அதுவே செல்வம் அனைத்தினும் சிறந்த செல்வமாகும்.

நடுவு-நீதி. இகந்து-கைவிட்டு. ஓரீஇ-நீங்கி நயன்- அறம். வினைவாங்க-ஏவ. ஓர்த்த-விரும்பிய. சினம்-வெப்பம். தெறுதல்-சுடுதல். ஒல்கிய-தளர்ந்த. நாஞ்சில்-கலப்பை. விறல்-வெற்றி. வீழுநர்-விரும்புவார். இறைச்சி-இன்பம். கவர்பு-வாசிக்கப்பட்டு. கோல்-யாழின் கோல். மரீஇ-அடைந்து. பீடு-பற்றுக்கோடு. புறமாறும்-நீங்கும். திரு-நற்பேறு. புரை-உயர்வு. தவ-மேன்மேலும் உயர. செறுதல்-கோபித்தல். கண்ணோடல்-கருணை காட்டல். புறந்தரல்-காத்தல். தன்நகர்-தன் மனைவி. மனும் பொருள்-அழியாச் செல்வம்.


8. அறம் தலை பிரியா ஆறு!

ழகிய ஓர் இளம் பெண். இளைஞன் ஒருவனைக் காதலித்தாள். அவனும் அவளைக் காதலித்தான். ஆனால், அவர் காதலை அப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக் கொண்டிலர். அதனால் ஒருநாள் அவர்கள் இருவரும் ஒருவரும் அறியா வண்ணம் எங்கோ சென்று விட்டனர்; தாய் அவளைத் தேடிப் புறப்பட்டாள்; வழியில் வந்த அறிஞர் சிலர், 'தாயே! உன் மகளையும், அவள் காதலனையும் வழியில் கண்டோம்; அவர் போக்கில் தவறு இல்லை என்பது மட்டுமன்று; அதுவே உலகியல் முறையாம் என உணர்ந்து அவரைப் போக விடுத்து வந்தோம். ஆகவே, அவர் குறித்துக் கவலைப்படாது, திரும்பி வீட்டிற்குச் செல்வாயாக' என்றது இது.

"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக், கொளை, நடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை 5

என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!
காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆண்எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/44&oldid=1737221" இலிருந்து மீள்விக்கப்பட்டது