பக்கம்:கலித்தொகை 2011.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

49


புரிவுஅமர் காதலிற் புணர்ச்சியும் தரும் எனப்
பிரிவுஎண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்,
வருவர்கொல்? வயங்கிழாஅய்! வலிப்பல்யான், கேஎள் இனி, 5

"அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே, கனங்குழாஅய்! காடு” என்றார், “அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு” எனவும் உரைத்தனரே;
"இன்பத்தின் இகந்துஒரீஇ, இலைதீந்த உலவையால் 10

துன்புறூஉம் தகையவே காடு” என்றார், “அக்காட்டுள்,
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை,
மென்சிறகரால் ஆற்றும் புறவு" எனவும் உரைத்தனரே;
"கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகையவே காடு” என்றார், “அக்காட்டுள் 15

இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை" எனவும்
உரைத்தனரே;

எனவாங்கு,
இனைநலம் உடைய கானம் சென்றோர்,
புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் 20

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே."

விளங்கிய அணிபல அணிந்த என் ஆருயிர்த் தோழி! தன்பால் அருள் உள்ளம் கொண்டு, வந்தடைந்த பெரியோர்க்கு, அரிய அறவழியில் நின்று, அவர் விரும்புவன எல்லாம் கொடுப்பதும் பொருள்; பகைவர்களின் பெரிய படைகளை எல்லாம் வென்று அப்பெரும் படையுடைமையால் தன்னைப் பணியாதிருந்த அப்பகையரசர்களை அழிப்பதும் பொருள்; இருவர் உள்ளமும் ஒன்று கலப்பதால் உண்டாகும் காதலில், மனம், விரும்பும் புணர்ச்சியைத் தருவதும் பொருள் என்று எண்ணி, அப்பொருளீட்டி வரச்சென்ற நம் காதலர் பொருளீட்டி வராது வறிதே வந்து விடுவரோ என அஞ்சுகிறது என் உள்ளம்; அஞ்சுவது மட்டுமன்று; வந்து விடுவர் என்று உறுதியாக நம்புகிறது; அதற்குக் காரணமும் உள்ளது. கூறுகிறேன், கேள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/50&oldid=1694724" இலிருந்து மீள்விக்கப்பட்டது