பக்கம்:கலித்தொகை 2011.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மா. இராசமாணிக்கனார்


காதில் கனத்த குழை அணிந்தவளே! காடு, நெருப்புப் போலும் வெப்பம் உடைமையால் அடிபொறுக்க இயலாத கொடுமை உடைத்து என்று கூறிய அவரே அக்காட்டில், துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கிச் சேறாக்கிய சிறிது நீரையும், காதற் பிடிக்கு முன்னே ஊட்டிவிட்டு, பிறகே தான் உண்ணும் களிறும் உளது என்றும் கூறியுள்ளார்.

வெயிற் கொடுமையால் இலைகள் உதிர்ந்து போக, உலர்ந்து போன கொம்புகளையே உடைமையால், இன்பத்தைக் கைவிட்டு அகன்று துன்பத்தைத் தேடித்தரும் தன்மையுடைத்து நான் செல்லும் காட்டு வழி என்று கூறிய அவரே, அக்காட்டில் தன் அன்பைக் கவர்ந்து கொண்ட மெல்லிய பெண் புறா கோடையால் தளர்ந்து வருந்தும் வருத்தத்தைத் தன் மெல்லிய சிறகை விரித்து நிழல் அளித்துப் போக்கும் ஆண்புறாவும் உளது என்றும் கூறியுள்ளார்.

மலைமேல் வளரும் மூங்கில்களும் பட்டுப் போகுமாறு ஞாயிற்றின் திரண்ட கதிர்கள் காய்வதால் காட்டு வழி அணுகவும் இயலாத கொடுமையுடைத்து என்று கூறிய அவரே, அக்காட்டில் இனிமைதரும் நிழல் இல்லாமையால் வருந்தும் மடப்பம் மிக்க பெண் மானுக்கு, அதன் மீது வெயில் விழா வண்ணம், தன் உடல் நிழலைக் கொடுத்து உதவும் கலைமானும் உளது என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, இக்காதற் காட்சிகளைக் காணும் அவர் என்னை நினைந்து தம் கடமையை மறந்து வந்து விடுவரோ என அஞ்சுகிறது என் உள்ளம்!

ஆனால், தோழி! இத்தகைய நலம் மிக்க காட்டுவழியைக் கடந்து போயிருக்கும் நம் காதலர், என் நலத்தை அழிக்கும் அத்துணைக் கொடியவர் அல்லர். நெடிது காலம் வாராதிருப்பதினும் வறிதே மீள்வதே என்னை மிக மிக வருத்தும் என்பதை அறிவர்; மேலும் அக்காட்சிகள், அவருக்குக் காதல் நினைவோடு கடமையுணர்வையும் நினைவூட்டும். ஆதலின், அவர் பொருளீட்டி வந்தே என்னை இன்புறுத்துவர். மனத்திற்கு மகிழ்ச்சி ஊட்டும் அந்நம்பிக்கையை உறுதி செய்வதுபோல், பல்லியும் நல்ல இடத்தில் இருந்து வாக்களிக்கிறது பார்! மைதீட்டி அழகுபெற்ற என் இடக் கண்ணும் துடிக்கிறது பார்!

பேணார்-பணியாதார். தெறுதல்-அழித்தல். வலிப்பல்-உறுதியாகக் கூறுவேன். கயந்தலை-யானைக் கன்று. சின்னீர்-சிறிது நீர். இகந்து-நீங்கி. ஓரீஇ-நீங்கி, தீந்த-தீய்ந்து உலர்ந்த. உலவை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/51&oldid=1697572" இலிருந்து மீள்விக்கப்பட்டது