பக்கம்:கலித்தொகை 2011.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

55


கால்கள் மீது இட்ட ஆடும் கட்டிலில், வெண்மை ஒளிவீசும் மாண்புமிக்க அன்னத்தூவிகளைத் தூவிச் செய்த மெத்தென்ற படுக்கையில் உறங்கும் அவ்வளவு மெல்லியளாகிய நீ வழியிடையே வந்துநிற்கும் சிங்கத்தின் குரலைக்கேட்டு அஞ்சி நடுங்குவாய் அல்லவோ?

'கிளிபோலும் இனிய மொழியினை உடையாய்! என்னோடு வந்தால், தான் ஏற்ற மழைத் துளிகளையும் தாங்கமாட்டாது உதிர்ந்துவிடும் மெல்லிய மரத்தளிர் போலும் அழகுமிக்க உன் மேனி அழகிழந்து போகுமாறு, உலர்ந்த புதரில் பற்றி எரியும் காட்டுத் தீயிடையே புகுந்து வந்து வீசும் கானல் காற்று, அம்மேனி மீது மோத, நீ அழகிழந்து போவாய் அல்லவோ?'

- என்றெல்லாம் நம் காதலர் கூறுதலால், காதில் வளைந்த மகரக்குழை அணிந்த தோழி! அவர் பொருள் ஈட்டும் வினை குறித்து வெளிநாடு செல்லத் துணிந்து விட்டார் என்று எண்ணி வருந்தாதே. உண்மையை மறைத்தும் திரித்தும் கூற ஆசை கொண்டு, காடு கொடுமை நிறைந்தது என்று கூறினது, அது கேட்கும் நீ நடுங்கும் நிலை கண்டு மகிழ்வதற்காகவே தான்! உண்மையில் அவர் உன்னை விட்டு ஓர் இமைப்பொழுதும் பிரியமாட்டார்!

சிவந்து-கோபித்து. இறுத்த-தாங்கிய. புலம்-பகைவர் நாடு. கரிகளைக் கொண்ட வறண்ட அந்நிலத்தில். பொறி-புள்ளி தேர் அல் தேர்-பேய்த்தேர். உயங்க-வருந்த. மேவந்த-பொருந்திய மாண் அவிர்-மாட்சிமை மிக்க. தூவி-இறகு. விலங்குமான்-விலங்காகிய சிங்கம். வெருவுதல்-அஞ்சுதல். புரை-ஒத்த. கிளவி-மொழி. தளி-மழைத்துளி. முளி-உலர்ந்த. அரில்-புதர். பொத்திய-மறைத்த. வளி-காற்று. காண்மார்-காண்பதற்காக.


13. எம்மையும் பொருளாக மதி!

பொருளீட்டி வரச்செல்ல விரும்பினான் ஒரு தலைவன் ஆனால், அழகு மிக்க மனைவியைப் பிரிந்து போக அவனால் இயலவில்லை. அதனால், போகும் முன் அவளையும், அவள் அழகையும் பலவகையாகப் பாராட்டி மகிழ்ந்துவிட்டுப் பிரியத் தொடங்கினான். அது கண்ட அவன் மனைவி, காதல் வாழ்வின் சிறப்பையும், பொருளின் சிறப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டி அவனைத் தடை செய்தது இது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/56&oldid=1737226" இலிருந்து மீள்விக்கப்பட்டது