கலித்தொகை - பாலைக் கலி
57
வெறுப்பின் விளைவேயன்றி, வேறன்று என்பதை இப்போது அறிந்துகொண்டேன்.
செல்வம் அல்லது, ஒருவர்க்குச் சிறப்புத் தருவது வேறு உள்ளதோ என்று கேட்டு, அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் உன் அறிவு, உன்னை மயக்க, அதன் வலையில் அகப்பட்டு நீ அன்பை மறந்து விட்டாயோ?
செல்வம் இல்லாது போனபோது காதலர், காதலை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வர் என்ற, உறவுபோல் நடிக்கும் உறவிலாத அயலார் கூறும் சொற்களை உண்மை உரை எனக் கருதிவிட்டாயோ?
செல்வத்தைச் சேர்ப்பவர் அறநெறியில் நின்று சேர்த்தல் வேண்டும், அதை மறந்து அறமல்லாத வழியில் சென்று செல்வத்தைச் சேர்த்தால், அவ்வாறு அவர் சேர்த்த செல்வமே, அவர்க்கு இம்மை, மறுமை ஆகிய இரு பிறவியிலும் பகையாகிப் பெருந்துன்பம் தரும் என்பதை நீ அறியாயோ?
செல்வத்தின் இயல்பு இத்தன்மைத்து ஆதலின், அச்செல்வத்தோடு என்னையும் ஒரு செல்வமாக மதிப்பாயாக! நம்முள் நாம் பிரிவின்றித் தழுவி வாழும் இன்ப வாழ்வைக் கைவிட்டுப் போனால்பெறலாகும் செல்வத்தின்பால் வேட்கை கொள்வதை விட்டு விடுவாயாக! அவ்வாறு ஆசை விடுதல் ஒன்றே அழியாச் செல்வமாகும்!
அணை-தலையணை. மருள்-ஒத்த. பணை-மூங்கில், தட-பெருமை. துணைமலர்-இரண்டாக இணைந்த மலர். மௌவல்-முல்லை. முகை-அரும்பு. மாவீழ்-வண்டுகள் விரும்பும். வால்-வெண்ணிறம். இன்னாங்குப் பெயர்ப்பது-துன்பத்திடத்தே துரத்துவது. துனி-வெறுப்பு. மருளி-மயக்கம். அயர்ந்தாயோ-அன்பை மறந்தாயோ. செம்மை-செந்நெறி. இகந்துஒரீஇ-கைவிட்டு நீங்கி. மதித்தீத்தை-மதிப்பாயாக. கவவுக்கை-கூடிவாழும் வாழ்வு. விட-விடுதலால். அவவு-ஆசை. மனும்-நிலைபெற்ற.
14. வைகலும் செயலாகும்!
பொருளீட்டி வரக் கருதியோ, கல்விகற்று வரக் கருதியோ, பகைவரை வெற்றிகொண்டு வரக் கருதியோ ஒரு தலைவன் வெளிநாடு செல்ல விரும்பினான். அதை அறிந்த தோழி அவன் மனைவியின் காதல் பெருமை, அவனைப் பிரிய நேர்ந்தால்