பக்கம்:கலித்தொகை 2011.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

69



19. பிணையும் காணிரோ?

பொருளின் பொருட்டுப் பிரியக் கருதினான் கணவன். என்னையும் உடன் கொண்டு செல் என்றாள் மனைவி. காட்டுவழி கொடுமை உடையது எனக்கூறி மறுத்தான் அவன். கொடுமையிலும் கணவனைப் பிரியாதிருப்பதே கற்புடை மகளிர்க்கு அழகு எனக் கூறித் தன் வேண்டுகோளையே வற்புறுத்தினாள் அவள். அது இது.

"பல்வளம் பகர்பு ஊட்டும் பயன்நிலம் பைதறச்
செல்கதிர் ஞாயிறு செயிர்சினம் சொரிதலின்,
தணிவில்வெம் கோடைக்குத் தண்நயந்து அணிகொள்ளும்
பிணிதெறல் உயக்கத்த பெருங்களிற்று இனம்தாங்கும்
மணிதிகழ் விறல்மலை வெம்ப மண்பகத் 5

துணிகயம் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்;
'கிளிபுரை கிளவியாய்! நின்னடிக்கு எளியவோ?
தளிஉறுபு அறியாவே காடு' எனக் கூறுவீர்!
வளியினும் வரைநில்லா வாழும்நாள் நும்ஆகத்து
அளிஎன உடையேன் யான் அவலங்கொண்டு அழிவலோ? 10

'ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல்வேட்பின்
ஆறுநீர்இல' என அறன்நோக்கிக் கூறுவீர்!
யாறுநீர் கழிந்தன்ன இளமைநும் நெஞ்சுஎன்னும்
தேறுநீர் உடையேன்யான் தெருமந்து ஈங்குஒழிவலோ?
'மாண்எழில் வேய்வென்ற தோளாய்! நீ வரின்தாங்கும் 15

மாண்நிழல்இல ஆண்டைமரம்' எனக் கூறுவீர்!
நீள்நிழல் தளிர்போல நிறன்ஊழ்த்தல் அறிவேன்நும்
தாள்நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ?
எனவாங்கு,
அணையரும் வெம்மைய காடு எனக் கூறுவீர்! 20

கணைகழி கல்லாத கல்பிறங்கு ஆரிடைப்
பணையெருத்து எழில்ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ அவையே?”

நெல்லும் கரும்பும் போன்ற பற்பல வகை உணவுப் பொருள்களை விளைந்து கொடுத்து உயிர்களை வாழச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/70&oldid=1737234" இலிருந்து மீள்விக்கப்பட்டது