பக்கம்:கலித்தொகை 2011.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

71


வெளுத்துப் போவது போல் பசலை படர்ந்து பாழடைந்து போவேன் என்பதை அறிந்த நான், உன் கால் நிழலைக் கைவிட்டுத்தனித்திருக்க நினைப்பேனோ? நினைக்கமாட்டேன்; உயிர்விட்டு விடுவேன்!' - என்று நான் கூற, மீண்டும் மீண்டும், அதையே சொல்லி என்னை விட்டுச் செல்ல விரும்புவோரே! உம்மை ஒன்று கேட்கிறேன்; வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு விரைந்து பாயாதபடி, இடையிடையே நின்று தடுக்கும் பாறைகளைக் கொண்ட காட்டு வழியிலும், பருத்த கழுத்தினை உடைய அழகிய கலைமானை விடாது பின் தொடர்ந்து செல்லும் பெண்மானை, நீர் காணவில்லையோ? அவை ஒன்றை விட்டு ஒன்று பிரியுமோ? கூறுக.

பகர்பு-விளைந்து கொடுத்து. பைது அற-ஈரம் புலருமாறு. உயக்கத்த-வருத்தத்தை உடைய. விறல்-வெற்றி. துணி-தெளிந்த. தளி-மழைத்துளி. உறுபு அறியா-பெய்தலை அறியாத. வளி-காற்று. வரை-எல்லை. அளி-அருள். ஏய்க்கும்-ஒக்கும். தேறுநீர்-தெளிந்த தன்மை. தெருமந்து-தடுமாறி. ஊழ்த்தல்-கெடல். பிறங்கு-நிறைந்த. பணை-பருத்த.


20.நின்னிற் பிரியலென்!

பிரியேன் என்று உறுதிமொழி அளித்து ஒரு பெண்ணை மணந்து கொண்ட ஓர் இளைஞன், மணந்து கொண்ட சில நாட்களுக் கெல்லாம் பொருள் சேர்த்துவரக் கருதினான். அது அறிந்த அவன் மனைவியின் தோழி, அவனைக் கண்டு, அவனுக்கு அவன் வாக்குறுதியை நினைவூட்டி, செல்வத்தின் சிறப்பின்மையை எடுத்து விளக்கி அவன் கருத்தை மாற்றியது இது:

"பால்மருள் மருப்பின், உரல்புரை பாவடி,
ஈர்நறும் கமழ்கடாஅத்து, இனம்பிரி ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து,
பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருளில் சொல்லும் நீசொல் லினையே! 5

நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி,
'நின்னிற் பிரியலென், அஞ்சல்ஓம்பு' என்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/72&oldid=1737239" இலிருந்து மீள்விக்கப்பட்டது