பக்கம்:கலித்தொகை 2011.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மா. இராசமாணிக்கனார்


அவற்றுள், யாவோ, வாயின? மாஅன் மகனே!
கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான் 10

பழவினை மருங்கின், பெயர்புபெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயின் பிரிவோய்! நின்இன்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே."

வெண்மையில் சிறந்தது எனப் பெயரெடுத்தது பால். அதுவும் மருளுமளவு வெண்ணிறம் பெற்ற கொம்பு, உரல் போன்ற பெரிய கால், ஈரம் பட்டு மணம் வீசும் மத நீர் இவற்றை உடைய, காட்டு யானைக்கூட்டத்திலிருந்து பிடித்துக் கொண்டுவந்த யானைகள் நிறைந்த படை, காத்து நிற்கும் வெளிநாடு சென்று பொருள் தேடும் முயற்சி மேற் கொண்டிருக்கும் பொழுது மனைவியை மறந்து பிரிந்திருத்தலை உலகியல் முறை விரும்புகிறது என்ற அருள் இல்லாத சொற்களையும் நீயே சொன்னாய்; இவளைக் காதலித்த அன்று இவள் நெற்றியைத் தடவிக் கொடுத்தபடியே 'உன்னைப் பிரியேன்; ஆகவே நீ அஞ்சாதே' என்ற சொற்களையும் நீயே சொன்னாய். இவ்வாறு முன்னுக்குப் பின் முரண்படப் பேசுமளவு அறிவு மயங்கிப் போனவனே! அவ்விருசொற்களுள் எது உண்மை? நீ தேடி அலையும் பொருள், தேடுபவர் முயற்சிக் கேற்பக் கிடைக்காமல், அவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, தானே அவரைத் தேடி வந்தடையும்? அளித்த வாக்குறுதியை அழிக்காமல் காப்பாற்றுவதன் மூலம், வரும் பிறவியிலாவது செல்வம் வந்தடைய வழி செய்யக் கருதாது, உன்னைப் போகவிட்டு ஓர் இமைப் பொழுதளவும் வாழமுடியாத அன்பு வாய்ந்த இம்மடவோளுடைய மூங்கில் போன்ற தோளை மறந்து, இழிந்த அப்பொருள் தேடிப் போகத் துணிகின்றனையே! உன் அறியாமையை என்னென்பேன்?

பால்மருள்-பாலும் மயங்கும். மருப்பு-கொம்பு. ஒருத்தல்-யானைத்தலைவன். ஆறுகடிகொள்ளும்-வழியைக் காவல் புரியும். நன்னர்-நன்மையை உடைய. நீவி-கையால் தடவி. அஞ்சல் ஓம்பு-அஞ்சுதலைக் கைவிடுக. வாயின-உண்மை உடையன. மாஅன்மகன்-மயக்கத்தை உடைய மகனே. கிழவர்-உரியார். பெயர்பு பெயர்பு-மாறி மாறி. நின்இன்று-உன்னை இல்லாமல். அமைக்கவின்-மூங்கிலின் அழகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/73&oldid=1737244" இலிருந்து மீள்விக்கப்பட்டது