பக்கம்:கலித்தொகை 2011.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மா. இராசமாணிக்கனார்


கொலைவெம் கொள்கையொடு நாய்அகப் படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மடமான் போல
நின்னாங்கு வரூஉம் என் நெஞ்சினை
என்னாங்கு வாராது ஓம்பினை கொண்மே."

வெள்ளைக் கொம்புடைய யானையை அலைத்து ஓட்டும் கானவர் கொல்லையிலிருந்து துரத்த எறியும் கவண்கற்கள், பூக்களை உதிர்க்கும், வழியிடையே குறுக்கிட்டு நிற்கும் மலையும் வெப்பத்தால் காய்ந்து போகக் கடந்து செல்வதற்கு அரியவாகிய கொடிய வழியை, நீ தனியே கடந்து செல்ல, உன்னைப் பிரிந்து, நான் இங்கே தனித்திருப்பது, இவ்வூரார் நகைக்க இடமாகும்.

உன்னைப் பிரிய விட்டு, அவர் நகைப் பொருளாகிவிட்ட நான், இனி ஊணும் உண்ணேன்; உயிரும் வாழேன்.

கணவன்மாரால், தோளின்பம் நுகர்ந்து கைவிடப்பட்ட மகளிர், தண்ணீர் குடித்துப் பின்னர் எறிந்து விட்ட பனை ஓலைப் பொத்தருக்கு ஒப்பாவார்; அன்ப! அவருக்கு உண்டாம் அந்த இழி நிலையைச் சிறிதே எண்ணிப் பார்ப்பாயாக!

மனம் விரும்பி அன்பு செய்த கணவன்மாரால் காதல் இன்மம் நுகர்ந்து கைவிடப்பட்ட மகளிர், வாழ்வோர் போய் விட்ட பாழூரை ஒப்பர்; அன்ப! அவருக்கு உண்டாகும் அந்த இழி நிலையை எண்ணிப் பார்ப்பாயாக!

மனம் விரும்பிக் கூடிய கணவன்மாரால், கைவிடப்பட்ட மங்கையர், சூடி எடுத்தெறிந்த வாடிய மலருக்கு ஒப்பாவார்; அன்ப! அவருக்கு உண்டாம் அந்த இழி நிலையை எண்ணிப் பார்ப்பாயாக!

பொத்தர் போலவும், பாழூர் போலவும், வாடிய மலர் போலவும் யானும் உன்னால் வெறுத்து ஒதுக்கப்பட்டவளாகி விட்டேன்; ஆகவே என்னை உடன் கொண்டு செல்ல வேண்டாம். தானே தின்னலாம் என்ற வேட்கையால் ஓடி ஓடி அலைந்து, வேட்டை நாய், ஒரு மானைப் பிடிக்க, அம்மான், அதற்குப் பயன்படாமல், வேடர்க்குப் பயன்பட்டது போல், நான் கட்டிப் பிடிக்கவும் என்னிடத்தில் நிற்காமல் உன்பின் ஓடிவரும் என் நெஞ்சை, நீயே வைத்துக்கொள்ளுவாயாக.

கைம்மா-யானை. உளம்புநர்-அடித்து ஓட்டுபவர். புலம்கடி-புலத்தினின்றும் ஓட்டும். இறப்ப-பிரிய. அழுங்கல் ஊர்-இரங்கத்தக்க இவ்வூர். வேணீர் உண்டோர்-வேட்கையால் நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/77&oldid=1727781" இலிருந்து மீள்விக்கப்பட்டது