பக்கம்:கலித்தொகை 2011.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

77


உண்டோர். குடை-பனை ஓலையால் செய்த நீர் உண்ணும் கலம். ஓர்-ஆராய்ந்து பார். அல்குநர்-வாழ்வோர். ஆறாது-அடங்கி இராது. அமர்ந்த-விரும்பிய. நின்னாங்கு-உன்னிடம். கொண்மே-கொள்வாயாக.


23. வாழும் மதுகை இலேம்!

சின்னாட்களாகக் கணவன் போக்கில் சற்றே மாறுதல் இடம் பெறக்கண்ட மனைவி, அவன் தன்னை விடுத்து எங்கேனும் சென்று விடுவானோ என ஐயுற்று அஞ்சினாள். ஒருநாள் இரவு கனவில் அவன் வாய் பிதற்றியது அவ்ஜயத்தை உறுதி செய்யவே, வருந்திய அவள் தன் தோழிக்குக் கூறியது இது.

"நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்காரும், என்னும்சொல்
இன்தீம் கிளவியாய்! வாய்மன்ற நின்கேள்;
புதுவது பன்னாளும் பாராட்ட, யானும்
‘இதுஒன்று உடைத்து' என எண்ணி, அதுதேர, 5

மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல்கொண்டு என்தோள் கனவுவார்; 'ஆய்கோல்,
தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்,
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ?
இடுமருப்பு யானை, இலங்குதேர்க்கு ஓடும் 10

நெடுமலை வெஞ்சுரம் போகி, நடுநின்று,
செய்பொருள் முற்றும் அளவு” என்றார், ஆய்இழாய்!
தாமிடை கொண்டது அதுவாயின், தம்மின்றி
யாம்உயிர் வாழும் மதுகை இலேமாயின்,
தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின், 15

ஓய்யார் நுவலும் பழிநிற்பத், தம்மொடு
போயின்று, சொல்என் உயிர்."

இனிய சுவைமிக்க சொல்லுடையாய்! நெஞ்சு நடுங்கும்படிக் கேட்டும், கேட்ட அச்செய்தி பொய்யோ, மெய்யோ என ஐயப்பட்டும் அஞ்சிய ஒரு நிகழ்ச்சி, அஞ்சியபடியே மெய்யாகிக் கொடுமை செய்யும் என்று கூறும் பழமொழி முக்காலும் உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/78&oldid=1737251" இலிருந்து மீள்விக்கப்பட்டது