பக்கம்:கலித்தொகை 2011.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மா. இராசமாணிக்கனார்


உன் உறவினனாகிய என் கணவர், என்னைப் பலவாறு பாராட்டிப் புதியமுறையில் இன்பம் தரக்கண்ட நான். இப்புதுமைக்கு யாதேனும் காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணி, அதை ஆராய்வதில் ஆர்வங்கொண்டிருக்க, மாண்புமிக்க மலர்ப்படுக்கையில், என் தோளில் கிடந்து துயிலும் அவர், ஒருநாள் கனவில், 'குத்தும் கொம்புகளை உடைய யானை, தண்ணீர் வேட்கையைத் தணித்துக்கொள்ள முடியாமல் வருந்தி, கடைசியில் கானல்நீரை நீர் என்று கருதி அதன் பின் ஓடி ஏமாறும் கொடுமை மிக்க, காட்டு வழியைக் கடந்து போய், வேற்று நாட்டில் தங்கிப் பொருள் சேர்த்து வரும்வரை, அழகிய தொடிகள் நிறைந்த முன்கையை உடைய இவள் கவலை கொண்டு கலங்காமல், இல்லறக் கடமைகளைக் கருத்தாய்ச் செய்வாளோ?' என்று வாய் பிதற்றினார்.

அணி பல அணிந்த தோழி! நம் கணவர் கருதிய கருத்து அதுவே ஆதலாலும், அவர் இல்லாமல் உயிர் வாழும் ஆற்றல் நமக்கும் இல்லை ஆதலாலும், 'மனைவி மார்பில் தொய்யில் எழுத மறவாத அவன், இப்போது அவளையே மறந்து போய் விட்டான்' என்ற பழிச்சொல் அவரிடத்திலேயே நிற்கும்படி, என் உயிர் அவரோடு கூடவே போய்விட்டது என்று அவருக்குச் சொல்லிவிடு.

கடுத்தும்-ஐயுற்றும். அணங்கு-வருத்தம். வாய்மன்ற-உறுதியாக உண்மை. மாசுஇல்-குற்றம்இல்லாத. கோல்-சித்திர வேலைப்பாடு. தொடி-வளையல். இடுமருப்பு-குத்தும் கொம்பு. தேர்- பேய்த்தேர். மதுகை-ஆற்றல்.


24. ஆயிழை கவினே!

பொருள் தேடிவரப் போகும் தன் கருத்தை, ஓர் இளைஞன் தன் மனைவியின் தோழிக்கு உணர்த்த, அதுகேட்ட அவள் நீ பிரிந்தால், அழகிழந்து போகும் உன் மனைவியினுடைய கண். கைவளை, நெற்றி முதலாயின உன்னைப் பழிதூற்றும் எனக்கூறி அவனைத் தடுத்து நிறுத்தியது இது;

"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்,
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு, அகத்தவா, 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/79&oldid=1737252" இலிருந்து மீள்விக்கப்பட்டது