பக்கம்:கலித்தொகை 2011.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மா. இராசமாணிக்கனார்


எனநீ,
தெருமரல், வாழி, தோழி! நம் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந்து எழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வரும்என வந்தன்றுஅவர் வாய்மொழித் தூதே." 25

ஒற்றைக்குழை அணிந்த பலராமனின் நிறம்போன்ற கொத்துக்களைக் கொண்ட வெண்கடம்பும், ஞாயிற்றின் நிறம் போன்ற அரும்புகள் மலர்ந்த செருந்தியும், சுறாமீன் கொடியோனாகிய காமன் நிறம் போல, வண்டுகள் வந்து மொய்க்கும்படி மலர்ந்த காஞ்சியும், அவன் தம்பியாகிய சாமன் நிறம்போல் நெருங்க மலர்ந்த புலிநகக் கொன்றையும், எருதுக் கொடியுடைய சிவன்போலத் தோன்றும் இலவமும் ஆகிய மலர்களை, அவ்வைம் பெரும் கடவுளர் நிற்கும் நிலைபோல மலரும் மரங்களால், ஆற்றங்கரை, அழகு பெறும். அக்காட்சியைக் காணும் நான் வருந்தவும், இளவேனிற் பருவம் வந்துவிட்டது!

வண்டுகள், தேனைத் தேர்ந்து உண்ணும் இவ்விளவேனிற்பருவத்திலும் கூடி வாழ முடியாமையால், இயற்கை அழகை இழந்துவிட்ட என் தோளின்பத்தை நினைந்து மகிழ வேண்டியவர், பண்டு ஆண்ட அரசனால் தளர்வுற்று, இப்போது தன்னை அடைந்த குடிமக்களுக்கு வருத்தம் வாராதபடி, பகைவரை அழித்துக் காப்பாற்றி, அவ்வெற்றிப் புகழை உலகத்தவர் பாராட்டும்படி போய்ப் புதிய நாட்டில் தங்கியிருக்கும் காதலரே அவர். அவர் அதைச் செய்வாரோ?

எத்திசை நோக்கினும் தேனீக்கள் ஆரவாரிக்கும் திருமருதத்துறையில், கைவிடப்பட்டமையால் குற்றம் அற்ற என் அழகு கெட்டழிவதைத் தடுத்துக் காப்பாற்றி அருள் பண்ணும் தகுதி உடையவர், தன் குடை நிழலை விரும்பி வந்தடைந்த குடிமக்களைத் தாங்கி, அவர் குறைகளைப் போக்கி, அப்புகழை அனைவரும் பாராட்ட, பகைவன் நாட்டில் சென்று வாழும் நம் காதலரே அவர். அவர் அதைச் செய்வாரோ?

ஆறு, பெருகி ஓடாது, மணல் அறல்படுமாறுமெல்ல ஓடும் இளவேனிற் பருவத்தில், அழகிய என் நெற்றி ஒளி இழந்து வேறுபட்டு பாராட்டத் தக்க பெருவனப்பை இழப்பதை, இழக்காமல் காத்து அருள் செய்யக் கூடியவர், ஆளும் அவர் அரசனால் வரும் கேட்டிற்கு அஞ்சித், தன் குடை நிழலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/83&oldid=1730610" இலிருந்து மீள்விக்கப்பட்டது