பக்கம்:கலித்தொகை 2011.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மா. இராசமாணிக்கனார்


தங்கும்படி, மரங்கள், அவற்றை ஏற்றுக் கொள்ளும் இவ்விளவேனிற் காலத்தில்-

வெயில் உள்ளே புகுவதற்கு இயலாதபடி நெருங்க வளர்ந்த, மணம் வீசும் மலர்களைக் கொண்ட, பூஞ்சோலையில் குயில் கூவும் இளவேனிற் பருவம் பிறந்துவிட்டது என்பதை, அவருக்குச் சென்று கூறுவார் யாரேனும் இருந்தால், அவன் விரைந்து வந்து நான் துயர் மிகுதியால் துயில் மறந்து, இரவுப்பொழுதை வருந்திக் கழிக்க, மயில் போன்ற சாயலை உடைய பரத்தை மகளிரோடு கூடி, குளிர்ந்த குளத்தில் நீராடி, அம்மகிழ்ச்சியால் என்னை மறந்து அவரோடு தங்கியிருப்பான்; அதற்காகவாவது ஊர் வந்து சேருவான்; ஆனால், அந்தோ! சென்று அவனுக்கு உரைப்பவர் ஒருவரும் இல்லையே!

குன்றாப் புகழ்மிக்க கூடல் மாநகரில், முல்லை மலர்களில், தேனீக்கள் வந்து மொய்க்கும் இளவேனிற் பருவம் வந்து விட்டது என்று அவனுக்குச் சென்று கூறுவார் யாரேனும் இருந்தால், அவன் விரைந்து வந்து, நான் இரவின் இடையாமத்திலும், விழித்திருந்து வருந்த என்னை மறந்துவிட்டு, மூங்கில் அழகும் அணையின் மென்மையும் உடைய தோளும், மான் விழியும் கொண்ட மகளிரோடு மகிழ்ந்திருப்பான்; அம்மகிழ்ச்சி குறித்தாவது. ஊர் வந்து சேர்வான். ஆனால், சென்று கூறுவார் ஒருவரும் இல்லையே!

பெறுதற்கரிய இளவேனிற் பருவத்தோடு, வையை யாறும் மலர்நிறைந்த ஆற்றிடைக் குறையைச் சூழ்ந்து ஓடவும் செய்கிறது என்று சென்று அவனுக்குக் கூறுவார் இருந்தால் விரைந்து வந்து அன்பற்ற அவனோடு மாறுபட்டு, நான் அழகிழந்து போகவும், காமவேள் விழாவில், அணிகள் அணிந்த பரத்தையரோடு கூடி விளையாடி மகிழ்வான். எனக்காக வாராது போனாலும், தன் மகிழ்ச்சிக்காகவாவது வருவான். ஆனால், சென்று உரைப்பவர் ஒருவரும் இல்லையே!

- எனப் பலவாறு கூறிப் புலம்பி, உன் மனைவி, காதல் நோய் கொண்டு வருந்தி, கழல் கட்டி உன் கால்களைப் பணியாத, பகைவரைப் போல், நடுங்கித் துடிக்கிறாள். அவள் துயர் தீர்ந்து, இழந்த அழகை மீண்டும் பெறும்படி உன் பெரிய தேரை ஊர் நோக்கி ஓட்டுவாயாக!

ஆடி-உண்டு. புரிந்து-விரும்பி. புலம்பு-தனிமை. எவ்வாயும்-எங்கும். இறைகொள-தங்க. தொழுவை-நீர்நிலை. பானாள்-இடையாமம். படர்கூர-துன்பம் மிகுமாறு. பணை-மூங்கில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/93&oldid=1735738" இலிருந்து மீள்விக்கப்பட்டது