பக்கம்:கலித்தொகை 2011.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மா. இராசமாணிக்கனார்


எனவாங்கு,
வாளாதி; வயங்கிழாய்! வருந்துவள் இவள்என
நாள்வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய்யன்றி
மீளிவேல் தானையர் புகுதந்தார்
நீள்உயர்கூடல் நெடுங்கொடி எழவே." 25

தோழி! மழை பெய்த காலத்தில் விரைந்தோடிய நீர், வற்றிச் சிறுசிறு கால்களாக மாறித், தெளிந்து ஓடி அழகு பெறவும் எங்கும் நுண்மணல் பரக்கவும், மணல்மேட்டை அழகு செய்வதுபோல், இண்டைக் கொடியின் வாடிய மலர்கள், காம்பற்று உதிரவும், கணவனைப் பிரிந்த மகளிரின் நெற்றி ஒளி இழந்து காட்டுவது போல், முன்பு பூத்தபூக்களைப் பீர்க்கு இன்று இழக்கவும். காதலரைக் கூடிக்களித்த மகளிர் முகம் போல், தாமரை பூக்கவும் குளிரால் உடல் வளைதற்குக் காரணமான பின்பனிக் காலமும், முன்பனிக் காலத்து வாடையும் நம்மைச் செயலிழக்கச் செய்து, சாகும் நிலைக்குக் கொண்டுவந்துவிட, அந்த இரண்டையும் கடந்து வந்து வருத்தும் இளவேனிற் பருவமல்லவோ, வந்து சேர்வேன் என்று காதலர் வாக்களித்த காலம்? அதுவரை, தோழி! நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்?

பயன்மிக்க திங்களின் கதிர்கள், பாலைப் பொழிந்தாற் போல் காட்சிதரும் இரவோடு, சிறந்த என் அணிகளும் சில்லிட்டுப் போகும்படி வந்து, உலாவும் வாடைக் காற்று பகைவரை அழித்து அவர் நாட்டைக் கைப்பற்றி வரும் தலைவர், நம் தெருவீதியில் அழகிய யானைமீது அமர்ந்து வரும் அழகைக் காண, நம்மை உயிரோடு விட்டு வைக்குமோ? வைக்காது உறுதியாக!

கரும்புப் பூவின் வெண்ணிறம் வாடுமாறு வாட்டிவிட்டு, தோள்கள், குளிர் மிகுதியால் குறுகி மார்பை அடையுமாறு தூற்றும் இத்தூரல், தாள் முயற்சியால் வெற்றியுண்டாக வென்று, குதிரை மீது அமர்ந்து, வான்வீரர்களையும் வென்று வரும் தலைவரின் வெற்றித் திருவழகைக் காணும்வரை நம் உயிரை விட்டு வைக்குமோ? இல்லை, வைக்காது உறுதியாக!

புதர்கள் தோறும் புகைபடிந்ததுபோல் படர்ந்து பற்களின் நுனி, ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளுமாறு வந்து வளைத்துக் கொள்ளும் இப்பின்பனி, பகைவரை வென்று, அவர் அளிக்கும் திரைப்பொருளைக் கைக்கொண்டு, தேர் ஏறி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/95&oldid=1735804" இலிருந்து மீள்விக்கப்பட்டது