பக்கம்:கலித்தொகை 2011.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

95


காதலரின், வீரத்தால் பிறந்த பேரழகைக் காண நம்மை விட்டு வைக்குமோ? வைக்காது உறுதியாக!

- எனப் பயனற்ற சொற்களை வீணே வழங்காதே! விளங்கிய அணிகளை அணிந்தவளே! குறித்த நாள் எல்லையை எண்ணிப் பார்த்து, அதுவர இன்னமும் சின்னாள் உள என அறிந்தும், அந்நாள்வரை மனைவி ஆற்றியிருக்கமாட்டாள் என்று எண்ணி, அதற்கு முன்பாகவே உயர்ந்த மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரில் வெற்றிக்கொடி பறக்குமாறு, காதலர், தலைநகர் வாயிலுள் புகுந்துவிட்டார்!

கால்பட்டு-கால்வாய்களாகி. கலுழ்தேறி-கலக்கம் தெளிந்து. வரித்தல்-அழகு செய்தல். வாடு-வாடிய மலர். கூர்ந்த-நடுங்கிய. கையாறு-செயலற்றுப் போதல். ஆர்-நுகர. அதிர்பு-நடுங்கி. செம்மல்-வீரத்தால் பிறந்த அழகு. பூவம்கள் பொதிசெய்யா முகை வெண்பல்-இனிய தேன் உள்ளே பெறுதல் அற்ற அரும்பாகிய வெண்பல். பொர-நடுங்க. வாளாதி-வாளா வருந்தாதே.

31. அயர்ந்தீகம் விருந்தே!

பொருள் தேடப் போயிருக்கும் என் கணவன் வருவதற்குள், வந்து விட்டதே இவ்விளவேனில் என அப்பருவத்தை நொந்து கொண்டாள் ஒரு பெண். 'பெண்ணே! வந்த வேனில், கணவர் வருகையை அறிவிக்கும் தூது ஆகும்; ஆகவே, அதை நொந்து கொள்வதை விடுத்து, வரவேற்று விருந்தளிப்போமாக' எனக்கூறினாள் தோழி. அது இது:

"எஃகுஇடை தொட்ட, கார்க் கவின்பெற்ற ஐம்பால் போல்,
மையற விளங்கிய துவர்மணலது; அது
ஐதாக நெறித்தன்ன அறல்அவிர் நீள்ஐம்பால்
அணிநகை இடைஇட்ட ஈகையம் கண்ணிபோல்
பிணிநெகிழ் அலர்வேங்கை விரிந்தபூ நெறிகொளத் 5

துணிநீரால், தூய்மதி நாளால், அணிபெற,
ஈன்றவள் திதலைபோல் ஈர்பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும்
வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும்,
நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும் 10

உணர்ந்தவர் ஈகைபோல் இணர்ஊழ்த்த மரத்தொடும்
புணர்ந்தவர் முயக்கம்போல் புரிவுற்ற கொடியொடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/96&oldid=1752303" இலிருந்து மீள்விக்கப்பட்டது