பக்கம்:கலித்தொகை 2011.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மா. இராசமாணிக்கனார்


நொந்து, நகுவனபோல் நந்தினகொம்பு; நைந்துள்ளி
உகுவது போலும்என் நெஞ்சு; எள்ளித்
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில்; கையில்
உகுவன போலும் வளை; என்கண்போல்
இகுபு, அறல்வாரும் பருவத்தும் வாரார்; 20

மிகுவது போலும் இந்நோய்;
நரம்பின் தீங்குரல் நிறுக்கும் குழல்போல்
இரங்கிசை மிஞிறொடு தும்பிதாது ஊதத்
தூதுஅவர் விடுதரார்; துறப்பார்கொல்?
இருங்குயில் ஆலும் அரோ! 25

எனவாங்கு,
புரிந்துநீ, எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி;
நீலிதழ் உண்கண்ணாய்! நெறிகூந்தல் பிணிவிட,
நாள்வரை நிறுத்துத்தாம் சொல்லிய பொய்யன்றி
மாலைதாழ் வியன் மார்பர் துணைதந்தார் 30

கால்உறழ் கடுந்திண்தேர் கடவினர் விரைந்தே."

'நிறைய விளைவதால், பிறநாட்டு நிலங்களுக்கில்லாத பெரிய புகழ் பெற்ற தமிழகத்து நிலங்களின் சிறந்த அழகைக் கண்டு களிக்க விரும்பி, அந்நிலத்தில் ஓடும் ஆறு கண் விழித்து நோக்குவதுபோல், ஆற்றருகே உள்ள குளங்கள், மலர்களால் நிறைந்து அழகுபெறவும், பளிங்கு மணி போன்ற வெண்ணிறக் கண்ணாடிக்குள்ளே, செந்நிறப் பவழத்தைப் பதித்து வைத்ததுபோல், முருக்கமரத்தின் மலர்ந்த இதழ்கள், தெளிந்த குளத்து நீருள் உதிர்ந்து படியவும், தெளிந்த குளத்து நீரில், தன்னுருவம்

தான் இருந்து தேன்குடிக்கும் மலரோடு நிழலாடக் கண்ட ஒரு தேனீ, அவற்றைத் தனக்குப் பகையாய் வந்து சேர்ந்த வேற்று ஈயும், வேற்று மலருமாகக் கருதிச் சினந்து அந்நிழலருகே சென்று மோதி ஆரவாரம் செய்யும்படி மரங்கள் எல்லாம், பன்னிற மலர்களை மலரவும், கணவனும் மனைவியும் கைகோத்து மகிழும்படி, மலர்களில் மகரந்தங்களை மலர்க்கும் வேனிற் பருவம் வந்துவிட்டது. ஆனால், மலர்போலும் அழகு வாய்ந்த மைதீட்டிய என் கண்கள், அழுது அழுது அழகிழக்குமாறு அகன்ற காதலர் வந்திலர்! அந்தோ! நான் என்ன செய்வேன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/99&oldid=1754285" இலிருந்து மீள்விக்கப்பட்டது