பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கலீலியோவின்


கல்வியாளர்கள் வாங்கிக் கொண்ட பார்வைக் குழாய் மூலம் வானவெளி இயக்கத்தை இரவிலே கண்டு ரசித்தார்கள்; பார்த்துப் பரவசமடைந்தார்கள்; திரும்பத் திரும்ப வான மண்டலம், சந்திரமண்டலம், வியாழன் மண்டலம் காட்சிகளை எல்லாம் கண்ணாழத்தோடு கண்டு கொண்ட பின்பு, 'விந்தையான தந்திரக் கருவியய்யா இது தாறு மாறாக எங்களை ஏமாற்றிட நாங்கள் என்ன அறிவற்ற முட்டாள்களா?' என்று பேசி விட்டு இது மாதிரியான வித்தைகளைப் பார்க்க இனிமேல் இப்படி எங்களைக் கூப்பிடாதே என்று ஆவேசமாகப் போய் விட்டார்கள்.

பாவம் கலீலியோ! மனமுடைந்தார்! ஏன் அழைத்தோம் இவர்களை? எதற்காக மதித்துக் காட்டினோம்? இவர்கள் இந்த பூமியிலே பிறந்தது வீணுக்காகவா? எதற்கும் பயன்படாதவர்களாக பிடிவாதக்காரர்களாக இருக்கிறார்களே! என்று வேதனைப்பட்டார்?

அவர்களது எண்ணங்களையும், பேச்சுக்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட கலீலியோ இதற்குமேல் இவர்களது உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் எதிர் பாராமல் அவர் தனது பணிகளையே கண்ணும் கருத்துமாக மீண்டும் தொடரலானார்!

13. ஒளியை ஆராய்ந்த முதல்வன் கலீலியோ!

ஒளியைப் பற்றிக் கலீலியோ ஆராய்ந்தார். அவர் ஒளியைப் பற்றி ஆராய்வதற்கு முன்னரும் அவரது காலத்திலும் ஒளிக்கு வேகம் உண்டு என்று சிந்தித்துப் பார்த்தவர்கள் எவரும் இல்லை. அதனால், ஒளியின் வேகத்தை நாமே ஆராய்லாமே என்ற எண்ணத்தில்; ஒளியை அவர் ஆராய்ச்சி செய்தார்!

கலீலியோ முயற்சியால் அவரது ஒளி ஆராய்ச்சியில் நல்ல பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் ஒளியின்