பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணைகள்

73

அணைகள்

வேண்டும். அதன் உயரம் நீர் மட்டத்தின்மேல் 5 முதல் 10 அடி வரையும், அகலம் 10 முதல் 30 அடி வரையும் உள்ளவாறு அணை அமைக்கப்படுகிறது. பக்கங்களின் சரிவு 3:2 என்ற விகிதத்திலிருந்து 5:1 வரை இருக்கலாம். நீரோட்டம் வந்து தாக்கும் முகம் அலைகளால் அரிபடாமலும், சரியாமலும் இருக்க அது கான்கிரீட்டினாலோ கற்களாலோ மூடப்படும்.

பாறை நிரப்பு அணை (Rock fill Dam) என்பதை மண் அணையின் திருத்தம் எனலாம். தக்க மண் கிடைக்காதபோதும், கல் அல்லது கான்கிரீட்டு அணைக்குச் செலவு அதிகமாகும்போதும் இத்தகைய அணையைக் கட்டலாம். நிலையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட துண்டுப் பாறைகளால் இது அமைக்கப்படுகிறது. அவற்றின். நடுவே உள்ள பரலினாலான சுவரொன்று அணையின் வழியே நீர் கசியாமல் தடுக்கும். இவ்வகை அணைகள் புவி அதிர்ச்சியின்போது அதிகமாகச் சேதம் அடையாமல் தப்பும். பாறை நிரப்பு அணையின் உச்சியின் அகலம் 4 முதல் 28 அடி வரைக்கும். இதன் சரிவு 1:2 என்ற விகிதத்திலிருந்து 3:2ரை இருக்கலாம்.

கல்லணைகளும், கான்கிரீட்டு அணைகளும் கவர்ச்சி வகையைச் சேர்ந்தவை. தமது எடையினாலேயே நிலைத்து நிற்குமாறு அமைக்கப்படும் அணைகள் கவர்ச்சி அணைகள் (Gravity Dams) எனப்படும். இவற்றின் குறுக்குவெட்டு ஏறக்குறைய முக்கோண வடிவமாகவும், இவற்றின் அமைப்பு நேராகவும் இருக்கும். இவை வளைவுகளையும், உதை சுவர்களையும் கொண்டிருக்கும். நீரின் விசையாலும், வெப்ப நிலை மாறுதல்களாலும், புவி அதிர்ச்சிகளாலும் அணையானது திரும்பாமலும், கவிழாமலும், நழுவாமலும் நிலைத்து நிற்குமாறு இது அமைக்கப்பட வேண்டும். அணையின் வழியே நீர் கசிந்து இதைச் சேதப்படுத்தாமல் வடிந்து செல்ல வசதி அமைக்க வேண்டும். இதன் உச்சி நீர் மட்டத் திற்கு மேல் 6 முதல் 10 அடி வரை உயரம் இருக்கும். தரையின் மாறுதல்களினால் அணை மேலெழும்பிக் காலப் போக்கில் இதன் உயரம் அதிகமாகிவிடலாம். இதையும் மனத்திற் கொண்டே அணையின் உயரம் முடிவு செய்யப்படுகிறது.

கல்லினாலும், கான்கிரீட்டினாலும் வளைவான அணைகளைக் கட்டுவதில் சில நலன்கள் உண்டு. இந்த அணைகளில் நீரின் அழுத்தத்தை அணையின் எடையே தாங்கி நிற்பதில்லை; அமைப்பே ஒரு நெம்புகோல் போல் இயங்கி, இதை ஓரளவு தாங்குகிறது. அழுத்தத்தில் பெரும்பகுதி வளைவு தாங்கிகளின் வழியே அடிப் பாறையை அடைகிறது. ஆகையால் இப்போது முழு அணையும் கிடையாக உள்ள பெரும் வளைவுபோல் இயங்குகிறது. அணை மேலெழும்புவதினாலும், வெப்ப மாறுதல்களாலும், முறுக்கு விளைவுகளாலும் தோன்றும் விசைகளையும் மனத்திற்கொண்டே அணையானது அமைக்கப்படும். அணை உச்சியின் அகலம் நீளத்தில் 1/60 பகுதி இருக்கும். ஆனால் மேலுள்ள பாதை இன்னும் அகலமாக இருக்கவேண்டுமாயின், அணை உச் சியின் அகலத்தை அதிகமாக அமைப்பதுண்டு. அணையின் அடிப்பாகம் இதைவிட அதிகமாயினும், கவர்ச்சி அணைகளைவிடக் குறைவாக இருக்கும். பக்கங்களிலும் அடித்தளத்திலும் உறுதியான பாறைகளைக் கொண்டு, மிக ஆழமாக உள்ள மலை இடுக்கின் குறுக்கே போட இவ்வகை அணை மிகவும் ஏற்றது.

உதை சுவர் அணையில் (Buttress Dam) குறைவான அகலமுள்ள பல வளைவுகள் நீரோட்டத்திற்கு எதிராக அமைக்கப்படும். இந்த வளைவுகளை முக்கோண வடிவான உதை சுவர்கள் தாங்கி நின்று, வளைவுகளின் மேல் தொழிற்படும் விசைகளை அடித்தளத்திற்குக் கடத்தும். இந்த அணையில் பலவகை உண்டு. இது தனி அமைப்பாகவோ, பல அமைப்புக்களை இணைத்தோ கட்டப்படலாம். அடித்தளத்தில் தொழிற்படும் தகவுகள் (Stress) மிகக் குறைவாக இருக்குமாறு உதை சுவர் அணையை அமைக்கலாம். உதை சுவர்களுக்கு இடையே உள்ள இடத்தில் வடிகட்டிகளையும், நீரைச் சுத்தம் செய்யும் சாதனங்களையும் அமைக்கலாம். கவர்ச்சி அணையைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கும் மனத்திற்கொள்ள வேண்டும்.

அணை போடப்படும் ஆற்றின் வெள்ளம் வரம்பு மீறிப் போய்விட்டால் அணையே சேதமடையலாம். ஆகையால் மிகையான நீர் வடிய உதவும் அமைப்புக்கள் ஒவ்வொரு அணையிலும் இருக்கும். தேவையான உயரத்தில் அமைக்க ஏற்றவாறு உள்ள தடைகளாலோ, வடிகால்களாலோ வாய்க்கால்களாலோ இந்நீரைத் தனியே செலுத்திவிடலாம்; அல்லது அணையின் உயரத்தை நீர்த்தேக்கத்தின் உச்சமட்டத்தைவிட 10 முதல் 30 அடிவரை குறைவாக அமைத்து, மிகையான நீர் அணையின் மேல் வழிந்தோடுமாறு செய்யலாம். இவ்வாறு வழியும் நீர் கீழே வரும்போது வெகு வேகத்துடன் தரையை அடைந்து, அங்கே பெருங் குழிகளைத் தோண்டக்கூடும். ஆகையால் அணையின் அடியில் நீரின் வேகத்தைத் தாங்கும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அணை உச்சியின்மேல் பல எஃகுக் கதவுகளை அமைத்து, அவற்றை மூடியும் திறந்தும் அணையின்மேல் வழியும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இக்கதவு களின் மேலும், அணையின் மதகுகளின் மேலும், மின் னாக்கிகளுக்கு நீரைக் கடத்தும் குழல்களிலும் அதிகமான அழுத்தம் தொழிற்படும். இவ்வழுத்தத்தைத் தாங்கும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன. டி. பி. கு.

உலகிற் பெரிய அணைகள்

போல்டர் அணை (Boulder Dam) : உலகிலேயே மிக உயரமான அணை இதுதான். அமெரிக்காவிலுள்ள

போல்டர் அணைக்கட்டு

கொலராடோ நதியின் குறுக்கே கருங்குடைவு (Black Canyon) என்னுமிடத்தில் இது 1936-ல் கட்டி முடிக்கப்பட்டது. கொலராடோ நதியின் ஆற்றுப் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அதில் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும், நீர்ப்பாசனம் அளிக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இது