பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணைகள்

74

அணைகள்

அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது.

ஷாஸ்டா அணை (Shasta Dam): இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. இது இந்நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது.

கிராண்டு கூலி அணை (Grand Coulee Dam): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர்

கிராண்டு கூலி அணைக்கட்டு
உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம்

இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ்வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல்.

பான்டானா அணை (Fontana Dam) : டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது.

போர்ட் பெக் அணை (Fort Peck Dam) : மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது.

ஆண்டர்சென் ராஞ்சு அணை (Anderson Ranch Dam) : மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத்தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண்டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும், நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது.

ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ்வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி.

டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக்கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உலகிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள்.

அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லினாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்டபோது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதிகளுக்கு இது பாசன மளிக்கிறது.

(மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்).

அத்தம் (ஹஸ்தம்) (Corvus ẟ, Ỿ, ξ ,a, β) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர்.

அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக்குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்திலிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இதழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத்துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.