பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்வைதம்

80

அத்வைதம்

துக் காட்டுவர். பிறமதத்தினர் இவற்றிற்கு வேறு வகையாகத் தங்களுக்கு ஏற்பப் பொருள் கொள்வர். மாயாவாதச் சண்டமாருதம் என வரும் பகுதி பௌத்தம் முதலிய பிற மதங்களைக் குறிப்பதாகவும் கொள்வர். இவ்வாறு பிற அருளிச்செயல்களிலிருந்தும் எடுத்துக் காட்டலாம்.

சங்கரரே அத்வைதக் கொள்கையை உருப்படுத்தியவர். இவர் பிறந்தது மலையாள நாட்டுக் காலடி என்னுமிடம். சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்வாரும் உண்டு. மலையாள நாடு, தொல்காப்பியர் காலமுதல், சேரமான் பெருமாள் நாயனார், வேணாட்டடிகள் முதலியோர் காலம்வரை மிகச் சிறந்த தமிழ்நாட்டுப் பகுதியாகவே விளங்கியது. ஆதலின் சங்கரர் தமிழ் நாட்டவரே. அவர் தந்த கொள்கை அந்த வகையில் தமிழ்நாட்டுப் புதையலே ஆம். சௌந்தரிய லகரி அவர் பாடியதானால், அதில் திராவிட சிசுவெனத் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடி, அவர் பாடல்களின் இனிமை பெருமைகளில் மனமுருகி ஈடுபடுகின்ற இவர், தமிழை நன்குணர்ந்தவராதல் வேண்டும். திருஞான சம்பந்தர், “ஈறாய்த் திசை தானாய் வேறாய் உடனானான்“, “தனதுரை எனதுரையாக“ எனப் பாடும் இடங்கள் அத்வைதிகள் பாராட்டும் இடங்கள். சங்கரர் நிலைநாட்டிய காமகோடி பீடம் காஞ்சியிற் பிறந்து இன்றளவும் அத்வைதக் கொள்கையை வளர்த்து வருகிறது. தமிழ் நாட்டுச் சுமார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள் என்ற நிலைமை ஏற்பட்டுள்ள தன்றே?

அத்வைதக் கொள்கை இந்திய நாடு முழுவதும் பரந்த பெருமை பெற்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்ததற்கு இதுவே சிறந்த சான்றாம். பல பல நுட்ப வேறுபாட்டுடன் தழைத்துக் கிளைத்து இது இங்கு வளர்ந்தோங்கியது என்பதனை அப்பைய தீட்சிதரது சித்தாந்த லேச சங்கிரகம் தெளிவுறுத்துகிறது. அண்மைக் காலம்வரை அத்வைதத்தை வளர்த்த வடமொழி நூல்களும் தமிழ் நாட்டில் தோன்றி வந்தமைக்குத் திருவாரூரில் பிறந்த தர்மராஜ தீட்சிதரது வேதாந்த பரிபாஷையை எடுத்துக் காட்டலாம். வித்தியாரண்யரது நிழலில் தோன்றிய விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டிலும் பரந்தபோது, வித்தியாரண்யரது கருத்துக்கள் பெருவழக்குப் பெற்றுத் தமிழர் மனத்தினையும் கவர்ந்திருத்தல் வேண்டும். கோவிந்த தீக்ஷிதர் முதலானோர் தமிழ் நாட்டரசர்களது அமைச்சர்களாய் அத்வைதக் கொள்கையை வளர்த்த வரலாறும் உண்டு.

அத்வைதம் தமிழ்நாட்டில் வடமொழியில் வளர்ந்த வரலாற்றினும் தமிழ் மொழியில் வளர்ந்த வரலாறே சுவை மிக்கதொன்றாம் ; புதுமை நிறைந்ததொன்றாம். மேலே கூறிய சித்தாந்த லேச சங்கிரகம் ஒரு கொள்கையைச் சுட்டுகின்றது, (1.134) அத்வைதத்தினை வடமொழி உபநிடதச் சொற்கள் கொண்டு ஓதியுணர வேண்டுமேயன்றி, நாட்டு மொழி கொண்டு உணரலாகாது என்பதே அக்கொள்கை. தமிழ் மொழியிலும் அத்வைதக் கொள்கையை விளக்கும் நூல்கள் பரவியதால், முதல் நூல் ஆராய்ச்சி குன்றும் என்ற அச்சமே இந்தக் கொள்கை எழுந்ததற்குக் காரணமாகும். அத்வைதம் பேசும் தமிழர் வாயினையும் எழுதும் கையினையும் பூட்டி விலங்கிட எழுந்த இந்த முயற்சி பயனற்றுப் போயிற்று. தத்துவராயர் திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில் எத்தனையோ அத்வைத நூல்கள் தமிழ் நாட்டில் உலவியதனை அறிகின்றோம். நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அழகிய மணவாள நாயனார் முதலிய பெரியோர்கள் இக்கொள்கைக்கு மாறாகத் தொல்காப்பியர், திருவள்ளுவர், நம்மாழ்வார் முதலியோரது பாடல்களைத் திருமறை எனப் புகழ்ந்து போற்றி வற்புறுத்தி வந்தனர்.

மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தவை சிறந்த பாவாணர் வழிவந்ததே இங்குள்ள பெருமை. வேம்பத்தூரார் என்ற அந்தணக் கூட்டத்தினர் தமிழ்ப் பாடல்கள் பாடுவதில் தலைசிறந்தவர்கள். அவர்களைச் சேர்ந்த ஆளவந்தான் மாதவ பட்டர் ஞானவாசிட்டத்தின் ஒரு பகுதியினைத் தமிழில் மொழிபெயர்த்தார் இதன் வழியே திருஷ்டி சிருஷ்டி வாதம் கூறும் பழுத்த வேதாந்தம் பரவலாயிற்று. ஸ்ரீ பட்டர் என்பவர் பகவற்கீதையைப் பரமார்த்த தரிசனம் என்ற பெயரால் அழகாக விருத்தத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் வெண்பாவில் ஒரு மொழிபெயர்ப்பும் வந்தது.

தமிழ் நாட்டில் அத்வைதத்தினை வளர்த்த தனிப் பெருமை தத்துவராயரைச் சேரும். இவர் சூத சங்கிதையிலுள்ள ஈசுவர கீதையை அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய குருவான சொரூபானந்தர், சொரூபசாரம் என்ற அத்துவித அனுபூதி நூலைத் தெள்ளத் தெளிய அருளிச் செய்துள்ளார். இந்தச் சொரூபானந்தருடைய குருவான சிவப்பிரகாசரே பெருந்திரட்டினைத் திரட்டினார் என்ற கொள்கையும் வழங்குகிறது. கலைக் கட்டளை, அனுபூதிக் கட்டளை என்ற இரண்டு பிரிவில் பலவகைக் கொள்கைகளையும் பலவகைக் கருத்துக்களையும் விளக்கும் பாக்களைப் பல நூல்களிலிருந்தும் திரட்டிய பாடல் தொகுதியே பெருந்திரட்டு. இதனைத் திரட்டியவர் தத்துவராயர் என்றும் கூறுவர். இதிலிருந்து தத்துவராயர் குறுந்திரட்டு என்ற அரிய நூலையும் தொகுத்துத் தந்துள்ளார். இவை தத்துவ நூற்களஞ்சியங்களாகும். புலவர்கள் பாராட்டும் கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்த வகைகளைத் தம் ஆசிரியர் மேல் பாடி, அடங்கன் முறை என இவர் உலகிற்கு உதவியுள்ளார். இவை அத்வைத ஊற்றுக்கள். அஞ்ஞானத்தோடும், மோகத்தோடும் எழுந்த போராட்டத்தில் அறிவு வெல்லும் வெற்றியைப் பாடுவனவே அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும். இன்று தமிழ் நாட்டில் வேதாந்தத்தினைக் கற்க விரும்புவார் முதன்முதல் விரும்பிக் கற்கும் சசிவன்ன போதம் என்ற நூல் மோக வதைப் பரணியில் வருவதே ஆம். இந்த நூல்கள் கற்றோருக்கு அன்றி மற்றோருக்குப் பயன் தாராமை நோக்கி அனுபூதிப் பாடல்களை நாடோடிப் பாடல்களாகத் தச்சன் பாட்டு, வண்ணான் பாட்டு, பல்லிப் பாட்டு என்று பலவகையில் பாடிப் பாடுதுறை என்ற பெயரோடு வேறோர் உலகிற்கு உதவியுள்ளார். இந்த முறையில் வேதாந்தத்தினைப் பரப்பும் முயற்சி இந்தத் தமிழ் நாட்டில் வேர் கொண்டுவிட்டது எனலாம். மெய்ஞ்ஞானத் தங்கம், மெய்ஞ்ஞானக் கொம்மி, ஞானக்குறவஞ்சி போன்ற நூல்கள் சென்ற நூற்றாண்டுவரை எழுந்து மக்கள் மனத்தினைக் கவர்ந்துவரக் காண்கிறோம். தத்துவராயரது காலத்தினை அறுதியிட்டுக் கூறுவதற்கு இல்லை. பெருந்திரட்டில் சேர்ந்த நூல்களையும் சேராத நூல்களையும் மனத்தில் வைத்துப் பார்த்தால் இவர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று ஒருவாறு கூறலாம்.

தமிழில் வழங்கும் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்லிய நவநீதமேயாம். இதன் தெளிவும் இனிமையும் சுவையும் வேறெங்கும் நாம் காணாதவை. இதனை இயற்றியவர் தாண்டவராயர். இது தமிழ் நாடு, மலையாள நாடு முதலியவற்றில் எங்கும் வழங்குவதொன்று. தெலுங்கு நாட்டிலும் இதன் மொழிபெயர்ப்பு, மக்கள்