பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்வைதம்

81

அதிக சலுகை ஷரத்து

மனத்தினை உருக்குகின்றது. வடமொழியில் சங்கு கவி என்பார் இதனை மொழிபெயர்த்துள்ளார். ஆனால், அம் மொழிபெயர்ப்பினை வெளியிட்டவர் தமிழ் நூலே மொழிபெயர்ப்பு என்று மன்றாடுகிறார். இந்த நூல் 18-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது எனலாம்; பாமதீ வியாக்கியானம் பரவுவதற்கு முன் எழுந்த நூல் என்று கூறலாம்.

பிரபோத சந்திரோதயம் என்பது மாதை திருவேங்கட நாதர் என்ற அரச வள்ளல் 18ஆம் நூற்றாண்டில் இயற்றிய தமிழ் நூலாகும். இப்பெயர் கொண்ட வடமொழி அத்வைத நாடகம் உண்டு. அதன் மொழி பெயர்ப்பெனப் பெயரைக் கண்டுமட்டும் முடிவு செய்தல் ஆகாது. அதனைத் தழுவித் தமிழ் நூல்களின் கருத்துக்களை ஒட்டி எழுதிய காப்பியமாகும் இந்த நூல்.

ரிபு கீதை என்பது நடராசன் என்பவரால் மிக வெள்ளையான நடையில் எழுதப் பெற்ற நூலாகும். இந்த எளிமை ஒன்றே இதனைத் தமிழ் நாட்டில் பெருவழக்கினதாகச் செய்தது.

பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் முதலில் படிக்கின்றவர்களுக்குத் தத்துவக் கருத்துக்களை எளிதில் விளக்கும் நூல்கள் சைவ மடங்களிலிருந்து கட்டளைகள் என்ற பெயருடன் பல எழுந்தன. இந்த வகையில் அத்வைதக் கொள்கையை விளக்கும் நூல் ஒன்று நானா சீவ வாதக் கட்டளை என்ற பெயருடன் வெளிவந்தது. கட்டளை நூல்களில் இது தலை சிறந்து விளங்குகிறது. அத்வைதக் கொள்கைகளைப் பயில்வோர் முதன்முதல் படிக்கும் நூல் இதுவே ஆகும். தமிழில் இவ்வாறு பல நூல்கள் எழுந்ததன் பயனாகப் பார்ப்பனர் அல்லாதாரும் இக்கொள்கையைத் தெள்ளத் தெளிய அறிந்து ஒழுகலாயினர். பலர் துறவறம் பூண்டு அனுபூதி கைவரப்பெற்றனர். சில பெண் மக்களும் இதிலீடுபட்டு, அனுபூதி பெற்றுப் பல பெண்களை உய்வித்தனர். சாதி மதச் சழக்கினை அறுத்து, மக்களது ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை வளர்க்கும் பெருநெறியாக அத்வைதம் இந்த வழியில் வளர்ந்தது ; சூத்திர வேதாந்தம் என்று ஒரு சிலரால் இகழப்பட்டபோதும் அஞ்சாது நாட்டிற்குப் பெருந்தொண்டு புரிந்தது. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் அருணாசல சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், பொன்னம்பல சுவாமிகள், நாராயண யோகீந்திரர், இரத்தின செட்டியார், கோ. வடிவேலுச் செட்டியார் முதலியோர் தமிழ் நாட்டின் ஊர்தோறும் சென்று, இக்கொள்கையைப் பொதுமக்களிடம் பரப்பினர்; நூல்கள் பதிப்பித்தனர் ; உரைகள் எழுதினர். இதனால் பல மடங்கள் சில நூற்றாண்டுகளாக எழுந்தோங்கி வருகின்றன. காமகோடி பீடத்தினை முன்னரே குறித்தோம். செட்டி நாட்டில் காரைக்குடிக்கருகில் உள்ள கோவிலூர் மடம் பார்ப்பனரல்லாதாரது அத்வைத மடமாகச் சிறந்து தொண்டாற்றி வருகிறது. இராமகிருஷ்ணரது அடிச்சுவட்டினைப் பின்பற்றிய விவேகானந்தரது இயக்கத்தில் ஈடுபட்ட மடங்கள் பல தோன்றியுள்ளன. தமிழ் நூல்களும் அச்சாகியுள்ளன. திருவண்ணாமலை இரமண நிலையத்திலிருந்தும் நூல்கள் வெளிவருகின்றன.

பாரதியாரது வேதாந்தப் பாடல்கள் இந்தப் பொது நெறியே செல்வனவாம். சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சமரசப்படுத்தி, வேதாந்தத்தினை நிலைநாட்ட எண்ணி முயன்ற பெரியோர்கள் பலர். தாயுமானவர், அவிரோத வுந்தியார் பாடிய சாந்தலிங்கர், குமாரதேவர், கண்ணுடைய வள்ளலார்- இந்நால்வர் நூல்களிற் சிலவற்றிற்கு உரை எழுதிய சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள் முதலியோரும் இந்தப் பொதுநெறியைச் சேர்ந்த அத்வைதக் கொள்கையினர். இவ்வாறு நாம் கூறுவதனை மறுப்பவர்களும் உண்டு.

வடமொழியல்லாத பிறமொழிகளிலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இராமகிருஷ்ணர், விவேகானந்தர், இராமதீர்த்தர் முதலியோருடைய நூல்கள் எத்தனையோ முறை தமிழில் வெளிவருகின்றன. மொழிபெயர்ப்பு நூலையும் காப்பியப் புலவரான சிவப்பிரகாச சுவாமிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகிற்கு உதவினார்; கன்னட மொழியில் நிஜகுண முனிவர் எழுதிய வேதாந்த சூளாமணியை இப்பாவலர் பெருமானே மொழிபெயர்த்தார். வேதாந்தம் கற்பார் மிக விரும்பும் நூல்களில் இதுவும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தி மொழியில் உள்ள நூல்களில் ஈடுபட்ட தமிழர் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் சில சிறந்த மொழிபெயர்ப்புக்களைத் தமிழர்க்குத் தந்திருக்கின்றனர். நிச்சலதாசர் பெயரினை இந்தியாவில் எங்குள்ளவரும் அறிவர். அவருடைய விசார சாகரம் அனுபூதிவெள்ளம் ; தென்னாட்டில் கைவல்லிய நவநீதம் போல வடநாட்டில் பெருவழக்காக வழங்குவது. அவரியற்றிய விருத்திப் பிரபாகரம் ஒரு பெருஞ்சிக்கல் ; வருந்திப் படிப்பார்க்கு மிகத் தெளிவு. வேதாந்தக் கலைக்களஞ்சியம் என இதனைக் கூறலாம். இந்த இரண்டு நூலையும் குப்புசுவாமி ராஜு என்ற பெரியார் மொழிபெயர்த்து உதவினார். இவரும் பிறரும் மொழிபெயர்த்த நூல்கள் இன்னும்பல. வடமொழியிலிருந்தும் பஞ்சதசி, நைஷ்கர்ம்ய சித்தி, சுவராஜ்ய சித்தி, சங்கரர் பேருரை முதலிய நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அத்வைதம் ஒரு பேரனுபவம். அந்த வகையில் அனுபவப் பாடலில் எங்கும் அதனைக் காணலாம். சங்கரர் என்ற தமிழ் மகனார் அதனைக் கொள்கையாக நிலைநாட்டி உலகில் பரப்பினார். பிராமணப் பெருமக்களிடையே சாதி ஒழுக்கத்தினை ஒட்டி அது வளர்ந்து, சுமார்த்தரது பிறப்புக் கொள்கையாகி விட்டது ; பிறரிடம் சாதிமதச் சழக்கினை ஒழித்து, ஓர் ஒற்றுமையைத் தமிழ் நாட்டில் நிலைநாட்டி வருகிறது. சித்தர்களில் பலர் இந்தக் கொள்கையை நிலைநாட்டக் காண்போம். இவர்கள் சமுதாயத் தொண்டில் ஈடுபட்டு வந்ததையும் காண்கிறோம், தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர் அத்வைதப் பெருநூல்கள் எழுதியிருக்கக் காண்கிறோம். பொதுமக்கட் காப்பியங்களாகப் பல நூல்கள் வெளிவந்திருக்கவும் காண்கிறோம். இன்றும் இந்த உணர்ச்சி தேங்கித் தடைபொது புத்துயிரோடு ஓடி உலாவி, மக்களைத் தட்டி எழுப்பி வரவும் காண்கிறோம். தெ. பொ. மீ.

அதங்கோட்டாசிரியர் அகத்தியர் மாணவர்களுள் ஒருவர்; இடைச்சங்கத்தவர்; தொல்காப்பியத்துக்குக் குற்றம் கூறி, ஆசிரியர் சமாதானம் கூற அடங்கினர்.

அதிகச் சலுகை ஷரத்து (Most favoured nation clause) : வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகள் சில சமயங்களில் அவ்வொப்பந்தங்களில் அதிகச் சலுகை பெறும் நாட்டு ஷரத்தைச் சேர்ப்பதுண்டு. அதாவது, ஒரு நாடு, தான் வாணிபம் செய்ய விரும்பும் மற்றொரு நாட்டோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில், வேறு எந்த நாட்டிற்கு எவ்வளவு வியாபாரச் சலுகையை எக்காலத்தில் காட்டினாலும், அந்தச் சலுகைகளையெல்லாம் இந்தநாட்டிற்கும் காட்டுவது என்று முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு ஷத்து. உதாரணமாக, இந்தியா ஜப்பானோடு செய்துகொள்ளும் ஒரு வியாபார ஒப்பந்தத்தில், பிரிட்ட