பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரப் பிரிவினை

83

அதிபத்த நாயனார்

மந்திரி சபைக்கும் சட்டமியற்றும் நிலையத்திற்கும் உள்ள தொடர்பை இங்குக் காணமுடியாது. நிருவாகப் பகுதிக்குச் சட்ட சபையைக் கலைக்க அதிகாரம் கிடையாது. அரசியலமைப்பின் 20 வது திருத்தப்படி, காங்கிரசு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிற்பகலில் கூடவேண்டும். அதனுடைய அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒத்திப் போட்டாலொழிய, காங்கிரசு தொடர்ந்து நடந்துகொண்டே வரும். நீதி இலாகாவும் அம்மாதிரியாகவே பிரிக்கப்பட்டிருக்கிறது. சட்ட சபை ஜனாதிபதியின் நிருவாக அதிகாரத்திற்குட்பட்டதன்று. ஆனால், அமெரிக்க நாட்டில்கூட இம்மூன்று பகுதிகளுக்கும் பழக்கத்தில் இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி காங்கிரசுக்குச் செய்திகள் அனுப்புகிறார். இச்செய்திகள் மூலமாய் மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும்படி சிபார்சு செய்ய முடியும். சட்டங்களை நிராகரிக்கிற அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு. அவருடைய நிராகரிப்பை ஒவ்வொரு சட்ட சபையும் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர்கள் மூலம் ரத்து செய்யாவிட்டால், மசோதா சட்டமாகாது. நிருவாகத் தலைவர்களைத் தங்களுக்கு முன்னால் ஆஜராகச் சொல்லிச் சட்டங்களைப் பற்றியோ, அவர்களது இலாகாக்களைப் பற்றியோ விசாரணை செய்ய, இரண்டு சட்ட சபைகளுக்கும் அதிகாரம் உண்டு. ஜனாதிபதி செய்யும் நியமனங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் செனட் சபை முன்பாக ஜனாதிபதியைத் துரோகக் குற்ற விசாரணைக்குக் கொண்டுவரலாம். காங்கிரசு சட்ட சபை யியற்றும் சட்டங்கள் அரசியல் அமைப்பு ஷரத்துக்களுக்கு முரண்படுகின்றனவா அல்லது கட்டுப்பட்டிருக்கின்றனவா என்று தீர்ப்புக் கூறும் அதிகாரம் நீதி இலாகாவுக்கு உண்டு.

இணைப்பே அடிப்படையாயுள்ள இங்கிலாந்தின் பார்லிமென்டு பொறுப்பாட்சி முறையில்கூட ஒருவிதமான அதிகாரப் பிரிவினை இருக்கிறது. சட்டமியற்றும் அதிகாரம் பிரத்தியேகமான சட்ட நிலையத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அது அரசாங்கத்தின் ஒரு தனிப் பகுதி. நிருவாகமும் தனி உறுப்பாகவே அமைக்கப் பட்டிருக்கிறது. சட்ட சபை நிருவாக அதிகாரத்தை மேற்கொள்ளவில்லை. நீதி இலாகாவானது நிருவாகம், சட்டமியற்றும் ஸ்தாபனம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குட்படாமல், சுயேச்சையாய் இருப்பதற்கு வேண்டிய முறைகளிருக்கின்றன. பிரான்சு அரசியலமைப்புத் திட்டத்தைப் பரிசீலிப்போமானால், மூன்று பகுதிகளுக்குள் சில அமிசங்களில் இணைப்பும், மற்றும் சில அமிசங்களில் பாகுபாடும் காணப்படுகின்றன.

ஆகவே, உலகத்திலுள்ள சில முக்கியமான நாடுகளின் அரசியலமைப்புத் திட்டங்களில் ஓர் அரசியலமைப்பிலாவது பூரணப் பிரிவினையாவது, பூரண இணைப்பாவது இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலை அமைக்கும்போது இரண்டு முக்கியமான இலட்சியங்களை அடிப்படையாக நாம் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். முதலாவதாக அரசாங்கத்தின் மூன்று அதிகாரங்களும் தனித்தனிப் பகுதிகளில் ஒப்படைக்கப்படவேண்டும். ஒவ்வொரு பகுதியும் தன்னுடைய முதன்மையான கடமைகள் எவையோ அவைகளைக் கவனிக்கவேண்டும். இரண்டாவதாக, எந்த ஒரு பகுதியும் தானாகவாவது மற்றொரு பகுதியுடன் சேர்ந்தாவது மூன்றாவது பகுதியின் மீது யதேச்சையான கட்டுப்பாடு செய்யாமலிருக்கத்தக்க முறைகள் அரசியல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவைதான் மான்டெஸ்க்யூ பொதுவாக வற்புறுத்தின அதிகாரப் பிரிவினையைப் பற்றிய உண்மைகள். வீ. வெ.

அதிகார வரம்பு என்பது ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரித்துத் தீர்ப்புக்கட்ட ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்துக்குள்ள அதிகாரமாகும். அந்த நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து முடிவு செய்யத் தகுதி பெற்றதாயிருந்தாலும், அது விசாரிக்க வேண்டுமானால் அந்த வழக்கு அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருந்தாக வேண்டும்.

இந்த அதிகார வரம்பு இடம், நபர், பணம், பொருள் பற்றியதாக இருக்கும். ஒரு நீதி மன்றம், குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிகழும் வழக்குக்களை மட்டும் விசாரிக்கலாம் என்றால், அந்த அதிகார வரம்பு இடம் பற்றியதாகும். இதற்காக இராச்சியத்தை மாவட்டங்கள், தாலுகாக்கள் போன்ற பல பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எழும் வழக்குக்களை அப்பகுதியிலுள்ள மன்றங்களே விசாரிக்கலாம். அப்படிச் செய்வதால் ஒரே வழக்கைப் பல மன்றங்கள் விசாரணை செய்யும் குழப்பம் ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவரோ அல்லது தொழில் நடத்துபவரோ கொண்டுவரும் வழக்குக்களை மட்டும் விசாரிக்க அதிகாரம் உண்டு என்று கூறும்போது, அது நபர் அதிகார வரம்பாகும். ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழ்ப்பட்ட தொகை சம்பந்தமான வழக்குக்களை மட்டுமே விசாரிக்க அதிகாரம் உண்டு என்று கூறும்போது, அது பண அதிகார வரம்பாகும். பெருந்தொகை வழக்குக்களை விசாரிக்கும் நீதிபதிகள் மிக்க அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பர். அத்துடன் பெருந்தொகை அப்பீல் வழக்குக்களை அத்தகைய பெரிய நீதிபதிகள் விசாரிக்க இடம் ஏற்படுத்தியிருப்பதால் நியாயம் வழங்குவது திறமையாக நடைபெற இடமுண்டாகின்றது. ஒரு குறிப்பிட்ட நீதிமன்றம் இத்தகைய விஷயம் பற்றிய வழக்குக்களைத்தான் விசாரிக்க அதிகாரம் உடையது என்று கூறும்போது, அது பொருள் அல்லது விஷய அதிகார வரம்பாகும்.

எல்லாவித விஷயங்களையும் விசாரித்துத் தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் உத்தியோகத்துக்குச் சம்பந்தமில்லாத தனி நபர் உரிமைகள், கௌரவங்கள்-எடுத்துக்காட்டாக மடாதிபதிகளுக் குரிய உரிமைகள், கோவில்களில் முதலில் தீர்த்தம் பெறும் உரிமை, முனிசிபல் வரிவிதிப்புரிமை போன்ற பல விஷயங்கள், நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட்டனவாகா என்று சட்டங்கள் கூறுகின்றன. அதனால் உத்தியோகத்துக்குச் சம்பந்தமில்லாத கௌரவங்கள் போன்ற பல விஷயங்கள் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்டனவாகா என்று சட்டங்கள் கூறுகின்றன.

தல சுயாட்சியும் கூட்டுறவுச் சங்கங்களும் ஏற்பட்டிருப்பதால், சில குறிப்பிட்ட வழக்குக்களை விசாரிப்பதற்காக விசேஷ விசாரணை மன்றங்களும் அவை போன்றவைகளும் அமைக்கப்படுகின்றன. இவைகள் கூறும் தீர்ப்புக்கு அப்பீல் செய்யவும் ரிவிஷன் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில வேளைகளில் குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய காரியங்கள் விரைவாக நடைபெறவேண்டியிருக்குமாதலால், மேற்கூறிய விசேட மன்றங்கள் செய்யும் தீர்ப்புக்களைப் பற்றி விசாரிக்கச் சாதாரண நீதிமன்றங்கட்கு அதிகாரம் கிடையாது என்று சட்டம் செய்யப்பட்டிருக்கிறது. வீ. டி. ர.

அதிபத்த நாயனார் பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர் ; சோழ நாட்டில் நாகப்பட்டினத்திலிருந்த பரதவர். இவர் தினந்தோறும் தம் வலைப்படு மீன்களுள் மிகச் சிறந்த ஒரு