பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிர்ச்சிப் படைகள்

86

அதிவிடையம்

தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன.

மோட்டார் வண்டி மோதுதலினால் சேதமடையாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும்.

அதிர்ச்சிப் படைகள் (Commandos) எதிரியின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப்போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில்விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர்களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர்வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கியமான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன.

அதிர்வு (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறுவகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப்பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகாரமடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர்ந்திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும்.

ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும்.

அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம்பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு.

அதிர்வெண் (Frequency) ஒரு விநாடிக்குள் நிகழும் மாறுதல்களைக் குறிக்கும் ஓர் எண். மின்சார இயலில் இது வினாடியில் மின்னோட்டத்தில் நிகழும் முழு மாற்றங்களைக் குறிக்கும். ஒலியியலில் இது ஒரு வினாடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தாண்டிச் செல்லும் ஒலியலைகளின் எண்ணிக்கையைக் கூறும். ஒளி, ரேடியோ அலைகள் முதலிய மின் காந்தக் கதிர்ப்புக்களைப் பற்றிப் பேசும்போது, இச்சொல் இதையே குறிக்கும். ரேடியோ அதிர்வெண்கள், பொதுவாய் வினாடிக்கு ஆயிரம் சுற்று (கிலோசைகிள்) அல்லது மிலியன் சுற்று (மெகசைகிள்) எனக் குறிப்பிடப்படும்.

அதிராம பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள.

அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை அருளிச் செய்த சிவனடியார் (பதினோராந் திருமுறை).

அதிவிடையம் அக்கொனைட்டம் என்னும் சாதியைச் சேர்ந்த செடியினம்.

அதிவிடையம்
இலைகளும் பூங்கொத்தும்

1. பூ, 2. ஒரு பூவிலிருந்து உண்டாகும் ஐந்து ஒருபுற வெடி கனிகள். 3, கிழங்கு வேர்.

இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக்கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக்கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க்கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்ச-