பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

மும் சிதறுகிறது. இதனால் ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் விளிம்பு மாற்றத்தால் (Diffraction) ஒரு வட்டம் தோன்றும். இவ்விளைவை அடிப்படையாகக் கொண்டு, பொருளின் குறுக்கே அடர்த்தியான ஒளிக்கற்றை ஒன்றைச் செலுத்திச் சாதாரணமைக்ராஸ்கோப்பின்

அதீத மைக்ராஸ்கோப்பு

பொ-பொருள்
ஒ-ஒளிக் கற்றை

மை - மைக்ராஸ்கோப்பு

உதவியால் அதை நோக்கினால், சிறு துகள்களும் ஒளிப்புள்ளிகளாகத் தெரியும். இத்தகைய அமைப்புள்ள மைக்ராஸ்கோப்பு சிக்மாண்டி (Zsigmonety) என்பவரால் அமைக்கப்பட்டது. இது அதீத மைக்ராஸ்கோப்பு எனப்படும்.

அதீத மைக்ராஸ்கோப்பில் காணப்படும் ஒளிப் புள்ளிகளின் பிரகாசங்களிலிருந்து, அவற்றின் அளவுகளை மதிப்பிடலாம். தற்கால அதீத மைக்ராஸ்கோப்புகளில் கொலாயிடு நிலையிலுள்ள தங்கத் துகள்களைக் காண இயல்கிறது. இத்துகள்களின் அளவு சுமார் 17 ஆங்ஸ்ட்ராம் அலகுகள்.

கொலாயிடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அதீத மைக்ராஸ்கோப்புப் பெரிதும் பயன்படுகிறது. புகை கலந்த காற்றிலுள்ள கரித்துகள்களை எண்ணவும், நீர் முதலிய திரவங்களில் உள்ள வேற்றுப் பொருள்களைக் கண்டறியவும் இது பயன்படுகிறது. சாதாரண மைக்ராஸ்கோப்பில் புலப்படாத உயிரினங்களைக் காணவும் இது பயனாகிறது.

அதீத மையவிசைக் கருவி (Ultra-centri-fuge) : பலவேறு நிறைகளுள்ள துகள்களை ஒரு திரவத்தில் சேர்த்துக் கலக்கி அசையாமல் சிறிது நேரம் வைத்திருந்தால் அவை நிறைக்கேற்றவாறு பிரிந்து படியத் தொடங்குகின்றன. இவ்வகையில் அவற்றைப் பிரிக்கலாம். அதைப் போலவே, இத்தகைய துகள்களை மையவிசைக்கு உட்படுத்தினாலும், புவியின் கவர்ச்சியைப் போல் பன்மடங்குள்ள விசை தொழிற்பட்டு வெவ்வேறு நிறைகள் கொண்ட துகள்கள் பிரிகின்றன. சாதாரண மையவிசைக் கருவிகளில் (பார்க்க: மையவிசைகள்) பொருள்கள் சுழற்றப்படும் வேகத்தைப் போல் பன்மடங்கு வேகமாக அவற்றைச் சுழற்றவும், சுழற்சியினால் பிரியும் பொருள்கள் வெப்பச் சலனத்தால் மீண்டும் கலவாமல் இருக்கவும் ஏற்ற சாதனங்களை 1924 ஆம் ஆண்டில் ஸ்வெட்பர்கு என்பவர் கண்டுபிடித்தார். இவை அதீத மையவிசைக் கருவிகள் எனப்படும். இவர் முதலில் அமைத்த எந்திரங்களில் புவிக்கவர்ச்சியைப் போல் 5.000 மடங்குள்ள மைய விசை தொழிற்படுமாறு செய்யப்பட்டது. தற்காலத்தில் இவை இன்னும் சீர்த்திருத்தப்பட்டுள்ளன. தற்கால எந்திரங்கள் புவிக் கவர்ச்சியைப்போல் 7,50,000 மடங்கு வரையுள்ள மையவிசை தொழிற்படுமாறு அமைக்கப்படுகின்றன. இவற்றில் பொருள்கள் வினாடிக்குச் சில ஆயிரம் சுற்றுக்கள் வரை சுழலும்.

மையவிசைக்கு உட்படுத்தப்படும் பொருளை ஒரு கலத்தில் அதிகமாகச் சுழற்றும்போது, கலத்தின் மேல் தொழிற்படும் விசையினால் அது சிதைந்து வெடித்துவிடலாம். இதைத் தவிர்க்க, அது மிக உறுதியான நிக்கல்- எஃகு கலவையால் செய்யப்படுகிறது. கலத்தைச் சுற்றி ஹைடிரஜன் வாயுவை நிரப்பி, அது மெதுவாகச் சுற்றி வருமாறு செய்து, கலம் குளிர வைக்கப்படுகிறது. உராய்வற்ற இருசு தாங்கிகளில் கலத்தைப் பொருத்தி, எண்ணெயால் ஓடும் இரு டர்பைன்களால் இது சுழற்றப்படுகிறது. வேறொரு வகை எந்திரத்தில் ஓர் இரும்புக்கலம் ஒரு மின்காந்தத்தின் உதவியால் வெற்றிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, சுழலும் காந்த மண்டலங்களால் வெகு வேகமாகச் சுழற்றப்படுகிறது. இத்தகைய அமைப்பு, உராய்வு என்பதே இல்லாமல் சீராகச் சுழலும்.

அதீத மையவிசைக் கருவி

எ - எண்ணெய் நிறைந்த கலம்
மை - மையவிசைக் கருவி

அ - வெற்றிட அறை

விஞ்ஞான ஆராய்ச்சியில் அதீத மையவிசைக் கருவி ஓர் இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது. மருத்துவத்திலும், உயிரியலிலும் இது மிக அதிகமாக வழங்குகிறது. பல உயிர்ப்பொருள்களும், உடலின் இயக்கத்தினால் தோன்றும் பொருள்களும், இதைக் கொண்டு தூய நிலையில் பெறப்பட்டு ஆராயப்படுகின்றன. புரோட்டீன்களைப் பற்றிய அறிவு வளரப் பெரிதும் உதவியுள்ளது. உயிரணுவின் பல தன்மைகளை இது தெளிவாக்கியுள்ளது. ரசாயனத்தில், உயர்ந்த மூலக்கூறு நிறையுள்ள பொருள்களை ஆராய இது உதவுகிறது.