பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பாலும் அடிச்சார்ந்தார்

94

அப்பைய தீட்சிதர்


அப்பாலும் அடிச்சார்ந்தார் தமிழ் நாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலுள்ள சிவனடியார்களும், சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் கூறும் அடியார்கள் காலத்துக்கு முன்னும் பின்னும் சிவனடியைச் சார்ந்தவர்களுமாவர் (பெரிய புராணம்).

அப்பாலோ (Apollo) கிரேக்கக் கடவுளாகிய ஜூஸ் (Zeus) மகன்; ஒளி, கவிதை, உடல் நலம், ஆணழகு ஆகியவற்றின் தேவதை ; பிற்காலத்தில் சூரிய தேவதையாகக் கருதப்பட்டான். ரோமானியர்கள் கி. மு. 280-ல் 90 அடி. உயரமான ஒரு சிலை செய்தனர். அது உலக அதிசயங்கள் ஏழனுள் ஒன்றாகக் கருதப்பட்டது; கி. மு. 226-ல் பூகம்பத்தால் கீழே விழுந்தது. அராபியர் 653-ல் ரோம் நகரைக் கைப்பற்றியபோது அதை உலோகமாக விற்றனர்.

அப்பாவையர் திருவதிகை வீரட்டான புராணம் பாடியவர்.

அப்பாஜி : சாளுவ திம்மராசு அப்பாஜி என்பது இவருடைய முழுப் பெயர். இவர் விஜயநகரப் பேரரசனான கிருஷ்ண தேவராயனின் அமைச்சர். இவருடைய கூர்ந்த அறிவை விளக்கும் கதைகள் பல உண்டு.

அப்பிரகம் இந்தியாவில் மிகுதியாகக் கிடைக்கும் கனியங்களில் ஒன்று. மஸ்கோவைட்டு, பயோட்டைட்டு, பிளாகோபைட்டு, லெப்பிடோலைட்டு ஆகிய பல கனியங்கள் அப்பிரகம் எனப்படும். கருங்கல், நைஸ் போன்ற பாறைகளின் இடையில் படிக வடிவான மஸ்கோவைட்டுப் பெருந் தகடுகளாகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் சென்னை, பீகார், வங்காள இராச்சியங்களிலும், அமெரிக்காவில் தென் டக்கோட்டா, கொலராடோ முதலிய பகுதிகளிலும், இலங்கையிலும் கிடைக்கிறது. நெல்லூர்ச் சுரங்கங்களில் 10 அடி அகலமுள்ள தடிப்பான கட்டிகளாகவும் இது கிடைப்பதுண்டு, ஒரு தகட்டின் அளவு 30" x 24" வரையும் இருக்கும். 1948-ல் இந்தியாவில் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அப்பிரகம் உற்பத்தியாயிற்று. அப்பிரகம் ஒரே திசையில் வெகு எளிதில் பிளவுறும் தன்மை வாய்ந்தது. இது நெகிழ்வும், மீள் சக்தியும் உடைய திண்மம் ; உறுதியான மிக மெல்லிய தகடுகளாகுந் திறனுள்ளது. இதன் படிகங்கள் அறுகோண அல்லது சாய் கன சதுர வடிவுள்ளவை, அப்பிரகத்தைப் பிளந்து பெறப்படும் தகட்டை முனை மழுங்கிய ஊசியால் அடித்தால் அறுமுகங்களுள்ள நட்சத்திரம் போன்ற வடிவத்தில் அது உடையும். அப்பிரக வகைகளில் மஸ்கோவைட்டு ஒளியைப் புகவிடும். லெப்பிடோமெலேன் என்ற வகை ஒளியைப் புகவிடாது. மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களையுடைய வகைகள் உண்டு.

அப்பிரகம் சிக்கலான ரசாயன அமைப்புள்ளது. அப்பிரகக் கனியங்கள் கார உலோகங்களையும், ஹைடிரஜனையும் கொண்ட ஆர்தோ சிலிகேட்டுகள். பையோட்டைட்டுப் போன்ற சிலவகை அப்பிரகங்களில் மக்னீசியமும், இரும்பும் இருப்பதுண்டு.

பயன்கள் : ஒளியைப் புகவிடுந் தன்மையும், தீயை எதிர்க்கும் திறனும் வெப்பநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத தன்மையுமுள்ள அப்பிரகம் அடுப்புக்களிலும், விளக்குக்களிலும், சன்னல் கதவுகளிலும் மோட்டார் வண்டியின் முன்திரைகளிலும் பயன்படு அப்பிரகத் துண்டங்களை நகைகளில் பயன்படுத்துவதுமுண்டு. அப்பிரகத்தூள் வர்ணங்கள், காகிதம், உயவு ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. போட்டோத் தட்டு, படவிளக்கு நழுவம் (Slide), படங்களைப் பாதுகாக்கும் சட்டம் முதலியவற்றிற்கும் இது பயன்படுகிறது.

ஆனால் இது மிக முக்கியமாக மின்சாரத் தொழிலில் பயன்படுகிறது. மின்சாரத்தைக் கடத்தாத காப்புறையாக இது பல கருவிகளில் இன்றியமையாது விளங்குகிறது.

அப்பிள்ளையார் ஆழ்வார்கள் வாழித்திருநாமம் திருவந்தாதியுரை, திருவிருத்தவுரை ஆகியவறை இயற்றியவர்; வைணவர்; பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்.

அப்பினைன் மலைத்தொடர் இத்தாலியின் முதுகெலும்பு என்று கூறப்பெறும்; ஜெனோவா வளைகுடாவுக்கருகில் தோன்றி, இத்தாலி முழுவதும் சென்று சிசிலி வழியாகக் கடலடியில் ஊடுருவி, வட ஆப்பிரிக்க மலைகளுடன் தொடர்புடையது ; 800 மைல் நீளமுடையது. மிக உயரமான கார்னோ சிகரம் 9,580 அடி பல இருப்புப் பாதைகள் இம் மலையைக் குடைந்து செல்லுகின்றன. புகழ் வாய்ந்த சிகரம் வெசூவியஸ் என்னும் எரிமலையாகும். கராரா அருகில் தூய வெண்சலவைக் கல் கிடைக்கிறது. ஆர்னோ, டைபர் என்பவை இதில் தோன்றும் முக்கிய ஆறுகள். இத்தாலி நாட்டில் மூன்றில் இரண்டு பாகம் இந்த மலைத் தொடரே. இதுவே ஐரோப்பிய மலைகளுள் மிகத் தாழ்ந்தது. காற்றும் மழையும் கரைத்துத் தாழ்த்தி விட்டதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். சாலன்மாரினோ என்னும் சின்னஞ்சிறு குடியரசு இந்த மலையின்மீது உள்ளது.

அப்புக்குட்டி ஐயர் (18 ஆம் நூ.) யாழ்ப்பாணத்து நல்லூரினர்; சூது புராணம், நல்லூர்ச் சுப்பிரமணிய பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களைச் செய்தவர்.

அப்பூதி அடிகள் சோழ நாட்டில் திங்களூரிலிருந்த அந்தணர்; நேரில் காணு முன்னரே அப்பரை ஆசாரியரெனக் கொண்டு, அவர் பெயரில் அறம் புரிந்தும், தம் பிள்ளை இறந்து கிடந்ததையும் மறைத்து அப்பருக்கு அமுதளித்தும் முத்தி பெற்றவர் ; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்.

அப்பூலியா (Apulia) இத்தாலியின் தென்கிழக்கு மாகாணங்களுள் ஒன்று. பரப்பு: 7,442 சதுர மைல். மக்: 32,10,411 (1951). இம்மாகாணத்தில் பார் (Bari) முதலிய நகரங்களுண்டு. கிராமங்கள் மிகக் குறைவு. வாதுமை, எலுமிச்சை, ஆரஞ்சு, புகையிலை முதலியன ஏராளமாகப் பயிர் செய்யப்படுகின்றன சாராயம் காய்ச்சுதலும், மீன்பிடித்தலும் முக்கிய தொழில்கள். பொலோனாவிலிருந்து பிரிண்டிசிக்குள் செல்லும் ரெயில் பாதை அப்பூலியா வழியே செல்கிறது. பாரி, பிரிண்டிசி, ட்ரென்டோ, காலிபோலி முதலியவை முக்கிய துறைமுகப் பட்டினங்கள்.

அப்பைய தீட்சிதர் (1554-1626) விஜய நகர அரசர்களின் காலத்தில் தென்னாட்டில் சைவ மதத்தைப் பரப்பிய பெரியோர்களுள் ஒருவர். இவர் ஆரணிக்கருகிலுள்ள அடைப்பாலம் என்ற ஊரிற் பிறந்து, வேலுரில் அரசாண்ட சின்ன பொம்மன் என்ற சிற்றரசனால் கனகாபிஷேகம் செய்து பெருமைப் படுத்தப்பட்டார். பிற்காலத்தில் இவரைத் தஞ்சை அரசர்களும், விஜய நகர அரசரும் ஆதரித்தனர். இவர் பல அறிவுத் துறைகளில் புலமை பெற்றிருந்தார். ஸ்ரீகண்டரது சைவ பாஷ்யத்திற்கு இவர் உரை எழுதினார். மகா பாரதத்தையும், இராமாயணத்தையும் இவர் சுருக்கி எழுதியுளார். இவ்விரு காவியங்களும் சிவனே முதற்கடவுள்