பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி

105

அமரில்லிடேசீ

வளர் நுனிக் கதிர் அல்லது கூட்டுக் கதிர். வளரா நுனிக்கொத்துக்களும், கோழிக்கொண்டை போன்ற பலவித விசித்திர வடிவுக் கொத்துக்களும் உண்டு. பூக்காம்பிலையும், பூக்காம்புச் சிற்றிலைகளும், மெல்லிய, வற்றி புலர்ந்த செதில் போன்றவை; உதிராமல் இருக்கும்; நிறமுள்ளவையாக இருக்கும்.

பூவிதழ் 5 கண்ணாடி போல அல்லது உலர்ந்த செதில் போல இருக்கும். போலிக் கேசரங்கள் (Staminodes) சில இருக்கலாம். மகரந்தப்பை சில வகைகளில் ஒரே அறையுள்ளது; சிலவற்றில் இரண்டறையுள்ளது. சூலகம் இரண்டு சூலிலைகள் கூடியது. ஒரே அறையுள்ள சூலறையில் ஒரு சூல் அல்லது சில சூல்கள் இருக்கலாம். கனி உலர்கனி. மேற்பாகம் சிமிழின் மூடிபோலத் (Circumciss) திறக்கும். சிலவற்றில் அப்படி ஒழுங்காக வெடிக்காமல் தாறுமாறாகவும் வெடிக்கும். விதை ஒன்று அல்லது சில; வட்டமாகச் சப்பையாகப் பளபளப்பாக இருக்கும். மாவு போன்ற முளைசூழ்தசையில் கருச் (Embryo) சுருண்டு கிடக்கும். இந்தக் குடும்பத்தில் சுமார் 50 சாதிகளும் 500 க்கு மேற்பட்ட இனங்களும் உண்டு; அயன, உப அயன மண்டலங்களில் உள்ளவை. குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, பண்ணைக்கீரை, தொய்யாக்கீரை, பூளை, சிறுபூளை, பொன்னாங்கண்ணி, நாயுருவி இவையெல்லாம் சாமானியமாக வயல்களிலும் வழிப்பக்கங்களிலும் வளர்ந்திருப்பவை. கலவைக் கீரையில் இவை கலந்திருக்கும். கீரைத்தண்டு, அறுகீரை, சிறுகீரை தோட்டங்களில் பயிர் செய்யப்படுவன. சில தண்டுக்கீரை இனங்களில் விதையை வறுத்தும் மாவரைத்தும் உணவாகச் சில இடங்ளில் உபயோகிக்கின்றனர். வாடாமல்லிகை, கோழிக்கொண்டை முதலியவை தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பவை. வெளிநாடுகளிலிருந்து சில களைகளும் முட்செடிகளும் நமது நாட்டுக்கு முதல் உலக யுத்த காலத்திலும் பிறகும் வந்திருக்கின்றன. அவற்றுள் பஸ்ராமுள் என்னும் முள்ளுப் பொன்னாங்கண்ணியும் (ஆல்டர்னாந்திரா எக்கைனெட்டா), வெள்ளைப் பூவுள்ள நீர்வாடாமல்லிகையும் (கோம்பிரினா டிகம்பன்ஸ்) அமராந்தேசீ குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தக் குடும்பத்துச் செடிகளின் கனியும் விதையும் எளிதாகப் பரவுவதற்கு ஏற்றவை. பல குப்பைபோலக் காற்றில் அடித்துக் கொண்டு போகும். முள்ளுப் பொன்னாங்கண்ணி, பாதத்திலும்,சைக்கிள் முதலியவற்றிலும் குத்திக் கொண்டு நெடுந்தூரம் போகும். நாயுருவிக்கனி உலரும் போது பூக்கதிரில் கீழ்நோக்கித் திரும்புகிறது. ஆடு மாடுகளின் தோலிலும் நமது துணியிலும் காலிலும் வரிசையாக உருவினது போலக் குத்திக் கொள்ளும். கீரை விதைகளை எறும்பு இழுத்துக் கொன்டு போகும் பொது அவை வழியில் விழுந்து முளைக்கும். இவற்றின் பூங்கதிர்கள் வாடாமலும் நிறம் மாறமலும் இருப்பதால், இவை அமராந்தஸ் அதாவது அமரப்பூக்கள் எனப் பெயர் பெற்றன. மாறாத அன்புக்கு இந்த அமராந்தஸ் ஒரு அடையாளப் பூவாக மேனாட்டார் கருதுவர்.

அமராவதி குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையிலுள்ளது. இது சாதவாகன அரசர்களின் கீழைத் தலைநகரமாயிருந்தது. சலவைக் கல்லால் செய்த மிகவும் முக்கியமான ஒரு பௌத்த ஸ்தூபம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இங்கே இருந்து வந்தது. இங்குக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பல சிற்பங்கள் பொறிக்கப்பட்டு வந்துள்ளன. அந்த ஸ்தூபம் புத்தருடைய நினைவுப் பொருள்கன் மீது நிறுவப்பட்டிருந்தது. இந்தியவிலே இவ்வூருக்குத் தொலைவிலுள்ளவர்களும் இங்கு வந்து, பணம் செலவு செய்து,

ஸ்தூபத்தின் சிற்பம்-அமராவதி

உதவி: அரசாங்கப் பொருட்காட்சிச் சாலை, சென்னை

சிற்பங்களைச் செய்வித்திருக்கின்றார்கள். இந்த ஸ்தூபத்தைச் சுற்றியுள்ள அனியானது நாகார்ச்சுனரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடையில் கட்டப்பட்டதாகும். அமராவதிச் சிற்பங்கள் இந்தியாவில் காணப்பெறும் சிறந்த சிற்பங்களைச் சேர்ந்தவை. அவை புத்தருடைய வாழ்க்கையையும் பௌத்த ஜாதகக் கதைகளையும் சித்திரிக்கின்றன. இந்தச் சிற்பங்கள் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் சென்னைப் பொருட்காட்சிச் சாலையும், பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையுமேயாம். அமராவதியிலுள்ள அமரேசுவரருடைய கோயில் பௌத்தச் சிதைவுகளின் மீது கட்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. கல்வெட்டியற் (Epigraphical) சான்றுகள் 12 ஆம் நூற்றாண்டு வரையிலுங் கூட இந்தப் பௌத்த ஸ்தூபத்தில் வழிபாடு நடந்ததாகக் காட்டுகின்றன. அமராவதி ஆந்திரர்களுடைய ஐந்து ஆராமங்களுள் ஒன்றாகவும், பெரிய சிவஸ்தலமாகவும் இருந்து வருகிறது. சீ. கி.

அமராவதி கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வட்டங்களின் வழியாகச் சென்று, கரூரினருகே காவிரியில் சேரும் ஆறு.

அமராவதி தேவேந்திரனுடைய தலைநகர்; பூவுலகத்தில் புண்ணியம் செய்தோர் அடையும் உலகு என்று புராணங்கள் கூறும்.

அமரில்லிடேசீ (Amaryllidaceae) பெரிய ஒரு விதையிலைக் குடும்பம். இதில் இந்தியாவுக்கே உரிய இனங்கள் சிலவே. இது லில்லிக் குடும்பத்துக்கு மிக நெருங்கியது. லில்லியேசீயில் சூற்பை மேல் தோன்றுவது (Superior ovary). இந்தக் குடும்பத்துப் பூக்களின் சூற்பை உள்ளடங்கியது (Inferior ). விஷ மூங்கில், நில சம்பங்கி, நிலப்பனை,

14