பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமின்கள்

107

அமினோ - அமிலங்கள்

டர்களை அளிக்கும். பல பழங்களில் கரிம அமிலங்கள் உள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் சிட்ரிக அமிலமும், புளியிலும் திராட்சையிலும் டார்ட்டாரிக அமிலமும், ஆப்பிளில் மாலிக அமிலமும் உள்ளன.

முக்கியமான தாது அமிலங்களான கந்தகாமிலம், நைட்ரிக அமிலம், ஹைடிரோகுளோரிக அமிலம் ஆகியவை மிக அடிப்படையான மூலப்பொருள்கள். இவை பல தொழில்களில் பயனாகின்றன. புல அமிலங்களின் நீர்த்த கரைவுகள் மருந்துகளாகப் பயனாகின்றன.

அமின்கள் (Amines) : அம்மோனிய மூலக்கூற்றிலுள்ள ஹைடிரஜன் அணுக்களுக்குப் பதிலாக அல்கைல் தொகுதிகளையும், அரைல் தொகுதிகளையும் கொண்ட கூட்டுக்கள் அமின்கள் எனப்படும். இவ்வாறு ஒரு ஹைடிரஜன் அணுவை மாற்றி, முதலாம் அமினையும், இரண்டு ஹைடிரஜன் அணுக்களை மாற்றி இரண்டாம் அமினையும், மூன்று ஹைடிரஜன் அணுக்களை மாற்றி மூன்மும் அமினையும் பெறலாம்.

இவையனைத்தும் முக்கியமான கரிம மூலப் பொருள்கள்.

அலிபாடிக அமின்கள் : அம்மோனியாவை நீரிலோ, ஆல்கஹாலிலோ கரைத்து, ஒரு அல்கைல் ஹாலைடையோ, அல்கைல் நைட்ரேட்டையோ, டைஅல்கைல் சல்பேட்டையோ வினைப்படுத்தினால், மூவகை அலிபாடிக அமின்களையும் பெறலாம். இது ஹாப்மான் முறை எனப்படும். இதிற் கிடைக்கும் மூவகை அமின்களையும் தனியே பிரித்தல் அவ்வளவு எளிதல்ல. ஆகையால் இது அவ்வளவாகப் பயனாவதில்லை.

அலிபாடிக நைட்ரோ கூட்டுக்களைக் குறைத்து அமின்களைப் பெறலாம். இதற்குப் பலவகைப்பட்ட குறைக்கும் பொருள்களைப் பயனாக்கலாம்.

முதலிரண்டு அலிபாடிக அமின்கள் சாதாரண வெப்ப நிலையில் வாயுக்கள். அதற்கடுத்த படியாக உள்ளவை திரவங்கள். கடைசியானவை திண்மங்கள், மூலக்கூற்று நிறை மிக மிக, இவற்றின் கரையுந்திறன் குறைகிறது. முதலாவதாக உள்ள அமின்கள் அம்மோனியாவை ஒத்த, ஆனால் அவ்வளவு காரமாக இல்லாத மணமுள்ளவை. திண்ம அமின்கள் மணமற்றவை. இவை அமிலங்களுடன் கூடிப் படிக வடிவான கூட்டுக்களை அளிக்கின்றன. அமின்களின் உப்புக்கள் பல உலோக உப்புக்களுடன்கூடி இரட்டை உப்புக்களை அளிக்கின்றன.

மூவகை அமின்களும் நைட்ரச அமிலத்துடன் வெவ்வேறு வகையில் வினைப்படுகின்றன. இந்த வினையைக் கொண்டு இவற்றை வேறாகப் பிரித் தறியலாம். முதலாம் அமின்கள் நைட்ரச அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரஜன வெளிவீட்டு முதலாம் ஆல்கஹாலை அளிக்கின்றன. இரண்டாம் அமின்கள் மஞ்சள் நிறமான நைட்ரசோமின்களை அளிக்கின்றன. மூன்றாம் அமின்கள் குளிர்ந்த நைட்ரச அமிலத்துடன் வினைப்படுவதில்லை ; அவற்றைச் சூடேற்றினால் மிகச் சிக்கலான வினைகள் நிகழும்.

முதலாம் அமின்களைக் குளோரோபாரத்துடனும் ஆல்கஹாலில் கரைந்த காரத்துடனும் சூடேற்றினால் ஒருவகைக் கெட்ட நாற்றமுள்ள பொருள் தோன்றுகிறது. இப்பொருள் கார்பைலமின் எனப்படும். முதலாம் அமின்களைக் கண்டறிய இச்சோதனை பயனாகிறது. இது கார்பைலமின் வினை என வழங்கும்.

மெர்குரியாலிஸ் (Mercurialis) என்ற கள்ளிவகைத் தாவரத்திலிருந்து மெதிலயின் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். மீன ஊறவைத்த உப்பு நீரில் புரோட்டீன்களின் சிதைவால் மூவகை மெதிலமின்களும் கிடைக்கின்றன. அசிடமைடு என்ற பொருளுடன் புரோமினையும், பொட்டாஷ் காரத்தையும் கலந்து வினைப்படுத்தி மெதிலமினைத் தயாரிக்கலாம்.

அரோமாடிக அமின்கள் : நைட்ரோ கூட்டுக்களைக் குறைத்து இவற்றைப் பெறலாம். எளிய அமைப்புள்ள அமின்கள் திரவங்களாகவும், மற்றவை திண்மங்களாகவும் இருக்கும். இவை நீரில் சரிவரக் கரையா. திரவ வடிவிலுள்ள அமின்கள் இலேசான நறுமணமுள்ளவை.

அரோமாடிக அமின்கள் அலிபாடிக அமின்களைவிட வலுக்குறைவான உப்பு மூலங்கள். இவை நிலையான உப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வுப்புக்கள் நீரிற் கரைந்தால், ஓரளவு நீர் முறிவதால் அமிலத் தன்மையுள்ளனவாக இருக்கும். மற்ற இயல்புகளில் இவை அலிபாடிக அமின்களையே ஒத்தவை. நைட்ரச அமிலம் தாழ்ந்த வெப்பநிலையில் முதலாம் அமின்களுடன் வினைப்பட்டு, டையசோனிய உப்புக்களை அளிக்கும். இரண்டாம் அமின்கள் நைட்ரச அமிலத்துடன் அலிபாடிக இரண்டாம் அமின்களைப்போலவே வினப்படுகின்றன. மூன்றாம் அமின்கள் நைட்ரசோ கூட்டுக்களை அளிக்கும். பார்க்க : அனிலீன். எஸ். ர.

டையமின்கள் : டைஹைடிரிக ஆல்கஹால்களிலுள்ள ஹைடிராக்சில் தொகுதிகளை அமினோ தொகுதிகளாக மாற்றினால் கிடைக்கும் கூட்டுக்கள் டையமின்கள் எனப்படும். மானோ அமின்களைப் பெறக் கையாளும் முறைகளையே கையாண்டு இவற்றையும் தயாரிக்கலாம்.

எதிலீன் புரோமைடை ஆல்கஹாலில் கரைத்த அம்மோனியாவுடன் 100° யில் சூடேற்றினால் எதிலீன் டையமின் [C2 H4 (NH2)2] என்ற கூட்டைப் பெறலாம். இது நிறமற்ற திரவம். இது அம்மோனியாவை யொத்த மணமுள்ளது. டெட்ராமெதிலீன் டைநைட்ரைலை சோடியத்துடனும் ஆல்கஹாலுடனும் வினைப்படுத்தி, டெட்ராமெதிலீன் டையமினைப் (NH2 NH2CH2 CH2 CH2 CH2) பெறலாம். கடாவரைன் (Cadavarine) என்ற பெயரால் வழங்கும் பென்டா மெதிலீன் டையமின் [NH2 (CH2) 5 NH2) ஒரு பாகுபோன்ற திரவம். இது டிரைமெதிலீன் சயனைடைக் குறைத்துப் பெறப்படுகிறது.

இத்தகைய மூலங்களிற் பல, அழுகும் அல்புமினிலும் சவங்களிலும் காணப்படுகின்றன. இவை டோமைன்கள் (Ptomaines) என அழைக்கப்படும். பார்க்க : அழுகுதல்.

அரோமாடிக டையமின்கள், டிரையமின்கள் போன்ற பாலி அமின்கள் பாலி - நைட்ரோ - ஹைடிரோ கார்பன்களையும், நைட்ரோ அமினோ கூட்டுக்களையும் குறைத்துப் பெறப்படுகின்றன. இவை படிக வடிவான திண்மங்கள். காற்றுப்பட்டால் இவை பழுப்பாக மாறும். அயகக் குளோரைடுடன் இவை சிறப்பான நிறங்களை அளிக்கும். ஆர்தோ, பாரா, மெட்டா என்ற மூன்று சம உறுப்பிகளாக இவை இருக்கலாம்.

அமினோ - அமிலங்கள் : ஒரு கார்பாக்சில் தொகுதியையும், ஒரு அமினோ தொகுதியையும் கொண்ட கூட்டுக்கள் அமினோ - அமிலங்கள் எனப்படும். புரோட்டீன்களை அமிலங்களாலோ, காரங்களாலோ, என்சைம்களாலோ நீர் முறித்தால் அமினோ அமிலங்கள் தோன்றும். தாவரங்களின் உயிரணுக்கள் எளிய பொருள்களிலிருந்து இவற்றைத் தயாரிக்கின்றன. அமினோ அமிலங்களிலிருந்து புரோட்டீன்கள்