பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

115

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மிக்கப்பட்டு, நிருவாக சபையும், சட்ட சபையும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு நிறுவப்பட்டன. சுதேசிகளோடு போர்புரியக் கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். இங்கு வேளாண்மை, சுரங்கத் தொழில், சில கைத்தொழில்கள் முதலியவை முன்னேற்றமடைந்தன. 1663-ல் 11-ம் சார்லஸ் தென் வர்ஜீனியா பிரதேசத்தில் ஒரு குடியேற்றம் நிறுவுவதற்காகச் சிலருக்கு அனுமதியளித்தார். அவர்கள் தென், வட கரோலினாக்களை நிறுவினர். வட கரோலினாவைவிடத் தென் கரோலினா மிக விரைவில் பல வகையிலும் முன்னேறிற்று. 1786-ல் சுதேசிகளுக்கும் தென் கரோலினாக்காரர்களுக்கும் சண்டை மூண்டது. அதில் குடியேறியவர்கள் வெற்றி பெற்றனர். 1719-ல் சட்ட சபை கவர்னரை நீக்கிவிட்டுத் தானே கிரௌன் குடியேற்றம் என்கிற முறையில் நிருவாகம் நடத்த விரும்பியதை லண்டன் அரசாங்கம் எதிர்க்கவில்லை. 1732-ல் ஜெனரல் ஓகல்தார்ப் (Oglethorpe) என்பவரால் ஜார்ஜியா நிறுவப்பட்டது. இங்கிலாந்தில் கடன்பட்டுப் பிழைக்க வழியற்றுப் போனவர்களுக்கு ஒரு வழி செய்ய விரும்பியே இக்குடியேற்றம் நிறுவப்பட்டது. ரம் என்னும் சாராய விற்பனையும், நீக்ரோ அடிமை வியாபாரமும் இங்குத் தடை செய்யப்பட்டன. ஆயினும் சிலகாலம் கழித்து இக் குறிக்கோள்கள் மறந்துபோகவே, அடிமைகளைக் கொண்டு வேளாண்மை நடத்தும் முறை. பயிற்சியில் வந்துவிட்டது.

ஸ்பானியர்களும், போர்ச்சுகேசியர்களும் நிறுவிய அமெரிக்கக் குடியேற்றங்களைப்போலத் தாங்களும் நிறுவ வேண்டும் என்று விரும்பிய ஆங்கிலேயர்கள் பொன் முதலிய விலையுயர்ந்த உலோகங்கள் வட அமெரிக்காவில் மிகுதியாகக் கிடைக்கும் என்று கருதியே இத்துறையில் இறங்கினர். ஆயினும் செழிப்பு மிகுந்த ஒரு கண்டத்தின் ஒரு பகுதி தங்கள் கையில் அகப்பட்டுவிட்டதால், அதைக் கைவிட அவர்கள் விரும்பவில்லை. அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து, குடியேற்ற நாடுகளோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியிருந்ததால், கப்பல் வாணிபமும் நாவாய் கட்டும் கலையும் இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்தன.

மேற்கூறிய குடியேற்றங்கள் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே அவை இங்கிலாந்தின் ஆதரவையும் பாதுகாப்பையும் எதிர்பார்த்தே நின்றன. தாய்நாட்டுச் செல்வம் ஏராளமாகச் செலவழிக்கப்பட்டு, இக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டன ; அன்றியும் தாய்நாட்டுத் துருப்புக்கள் இக்குடியேற்றங்களின் பாதுகாப்பிற்குத் தேவையாயிருந்தன. தூர நாடுகளில் குடியேற்றங்களை நிறுவுவதிற் செலவாகும் பணத்தை, அக்குடியேற்றங்களோடு செய்யும் வியாபார மூலம் இலாபமாகத் திரும்பப்பெறும் ஏகாதிபத்திய முறையில் தவறு ஒன்றுமில்லை என்று அக்காலத்தவர்கள். நினைத்தார்கள். ஆயினும் அமெரிக்கக் குடியேற்றங்கள் இங்கிலாந்திலிருந்து ஆயிரம் மைல் தொலைவில் இருந்ததால் சமாசாரப் போக்குவரத்திற்குச் சாதாரணமாகக் குறைந்தது மூன்று மாதம் பிடித்தது. ஒவ்வொரு விஷயத்திற்கும் இங்கிலாந்தைக் கேட்டே நடப்பது இயலாத காரியமாயிருந்தது. ஆகையால் குடியேற்றங்கள் பெரும்பாலும் தங்கள் விவகாரங்களைத் தாங்களே கவனித்துக்கொண்டு வந்தன. ஆயினும் வியாபாரமும் அரசியல் மேலதிகாரமும் தாய்நாட்டிற்கே இருந்துவந்தன.

தொடக்கத்தில் தனியாள் உரிமை வழங்கப்பட்டிருந்த பட்டயங்கள் மூலம் குடியேற்றங்கள் ஒவ்வொரு தனி மனிதருக்கோ, அன்றிக் கம்பெனிகளுக்கோ சொந்தமாயிருந்தன, 18ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திற்குள் அவையெல்லாம் கவர்னர், சட்ட சபை முதலிய அரசாங்க அங்கங்களைப் பெற்றுவிட்டன. அரசியல் அதிகாரமும் லண்டனிலிருந்து செலுத்தப்பட்டு, அவை கிரௌன் குடியேற்றங்களாயின. 11-ம் சார்லஸ் காலத்தில் 'வியாபார, வெளிநாட்டுத் தோட்டக் கவுன்சில்' (Council of trade and foreign plantations) என்று ஒரு கவுன்சில் நியமிக்கப்பட்டு, அது குடியேற்ற நாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்தது. அது ஆங்கிலேயப் பிரிவி கவுன்சிலின் ஒரு கமிட்டியே யாகும். கவுன்சில் உத்தரவுகள் மூலம் அது தன் அதிகாரத்தைச் செலுத்தி வந்தது. இங்கிலாந்திலும் குடியேற்றங்களிலும் ஒரே வகையான சட்டமுறையே அமலிலிருந்தது. பிரிட்டிஷ் பார்லிமென்டு, குடியேற்ற நாடுகள் சம்பந்தமாகவும் சட்டம் இயற்ற முடியும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1688க்குப் பிறகு, செலாவணி, தபால், கப்பல் வியாபாரம் முதலிய விஷயங்களைப்பற்றி இங்கிலாந்தே சட்டமியற்றியது. 1660-ல் இயற்றப்பட்ட ஒரு குடியேற்றச் சட்டப்படி குடியேற்ற நாட்டு வியாபாரம் முழுவதும் பிரிட்டிஷ் கப்பல்கள் வாயிலாகவே நடைபெறவேண்டும் என்று ஏற்பட்டது ; 1664-ல் செய்த ஒரு சட்டப்படி, குடியேற்றங்கள் இங்கிலாந்தைத் தவிர வேறு நாடுகளோடு வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டது. 1673-ல் மற்றொரு சட்டப்படி ஒரு குடியேற்றத்திற்கும் மற்றொரு குடியேற்றத்திற்கும் இடையே நடைபெறும் வியாபாரத்திலும் சில பொருள்களுக்கு வியாபார வரி விதிக்கப்பட்டது. . இச்சட்டங்களால் ஆங்கிலேய வியாபாரமும் கப்பல் முதலாளிகளின் நலன்களும் முன்னேறின. வியாபார சம்பந்தமாகச் செய்யப்பட்டிருந்த விதிகளை வியாபாரிகள் அதிகமாகப் பொருட்படுத்தாமலிருந்தனர். சட்டங்களை மீறின வியாபார முறைகளை ஆங்கிலேயக் கப்பல் மாலுமிகள் கைக்கொண்டனர். வால்ப்போல் (Walpole 1676-1745) காலத்தில் இச்சீர்கேடு உச்சநிலையை அடைந்திருந்தது. இவ்வொழுங்கீனத்தால் குடியேற்ற நாடுகள் எவ்வித மனக்கசப்பையும் கொள்ளவில்லை. III-ம் ஜார்ஜ் (1738- 1820) காலத்தில் வியாபார விஷயமாகப் புதுவிதிகள் ஏற்பட்டதே குடியேற்றங்கள் தாய்நாட்டை எதிர்த்துப் போரிட்டதற்கு முக்கிய காரணமாகும்.

செயின்ட் லாரன்ஸ் நதிக்குத் தெற்கே ஆங்கிலக் குடியேற்ற நாடுகள் ஏற்பட்டபோதே அவ்வாற்றின் கரையில் அக்காடி (Acadie 1604), குவிபெக் (1608) முதலிய குடியேற்றங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் நிறுவினர். அக்காடியில் ஸ்காட்லாந்துக்காரர்கள் சிலர் நோவாஸ்கோஷியா(Nova Scotia) என்னும் வேறொரு குடியேற்றத்தைப் பிறகு நிறுவினர். 1627-9-ல் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடந்த போரின் முடிவாக இங்கிலாந்து நோவாஸ்கோஷியாவை இழந்தது. 1697-ல் லூசியானாவும், 1718-ல் நியூ ஆர்லியன்சும் பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்டன. 1689-1713-ல் நடந்த ஆங்கில -பிரெஞ்சு யுத்தத்தில் எல்லைப்புறச் சண்டைகள் நடந்தன. நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் ஹட்ஸன் வளைகுடாக் குடியேற்றங்களைத் தாக்கின. முடிவில் 1713-ல் யூட்ரெக்ட் உடன்படிக்கைப்படி. நியூ பவுண்டுலாந்து இங்கிலாந்திற்குக் கிடைத்தது.

குவிபெக், மான்ட்ரியால், கிரௌன்பாயின்ட், நயாகரா கோட்டை முதலிய மதிலிட்ட நகரங்கள் பிரெஞ்சுக்காரர்களால் ராணுவ நிலையங்களாக நிறுவப்பட்டன. இக் கோட்டைகள் மூலம், பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தை வட அமெரிக்காவில் நிலை நிறுத்திக் கொள்வதோடு, ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் வளரவிடா-