பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

122

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசி ஜார்ஜ் மார்ஷல் என்பவர், மார்ஷல் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இத் திட்டப்படி 16 ஐரோப்பிய நாடுகளுக்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் 15 மாதங்களுக்கு மட்டும் ரூ. 2,500 கோடி அளிக்கப்பட்டது. மொத்தத்தில் இத் திட்டத்தின்படி அமெரிக்கா சுமார் ரூ. 11,000 கோடி செலவு செய்யவேண்டி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத் தொகையில் 80% இனாமாகக் கொடுக்கப்படும். இவற்றைத் தவிர, அ.ஐ. நாடுகள் ராணுவ உதவிக்காகப் பல முன்னேற்றமடையாத நாடுகளுக்குக் கோடிக்கணக்காகச் செலவு செய்து வருகின்றன. அன்றியும் ஐ.நா.ஸ்தாபனங்களின் பல கிளைகளின் மூலம் உலகப் பொருளாதார அமைதிக்கு ஏற்பன செய்ய அ. ஐ. நாடுகள் பெரிதும் முயல்கின்றன.

இன்று அ. ஐ. நாடுகள் உலகில் பெரிய வன்மையுள்ள நாடாக விளங்குகின்றன. சமுதாய நலன்களைக் கருதித் தனித்துவம் பின்னடைந்து வருகிறது. தனித்து நிற்கும் கொள்கை போய், உலகத் தலைமையை ஏற்று நடத்தும் நிலை வந்துள்ளது. செல்வமும் வறுமைபோலத் தனித்தியங்க முடியாது என்பது விளங்கிற்று. உலகப் பொருளாதார முன்னேற்றமும், அரசியல் குழப்பமின்மையும், உலக அமைதியும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுயநலத்திற்கும் தேவையாயிருக்கின்றன. மூன்று நூற்றாண்டுகளின் முயற்சியால் ஒரு செல்வமுள்ள நாடு உலகத் தலைமை பூண்டு நடத்தும் நிலைமை எய்தியுள்ளது. அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் இன்னும் அதிகமாக உதவக்கூடிய பெரிய திறமை அந்நாட்டில் அமைந்துகிடக்கின்றது. கே. ஏ. ஜோ.

அரசியல் அமைப்பு: ஆரம்பமும் வளர்ச்சியும் : இந்நாடுகள் செய்து கொண்ட அரசியல் சட்டங்களே உலகில் முதன் முதலாக எழுதப்பெற்ற அரசியல் அமைப்புக்கள். இவைகளே முதன் முதலாக அரசியலை அமைப்பதற்கெனத் தனியே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் செய்தவையாகும். ஒரு பொதுத் தேர்தலில் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற பின்னர் இவை அமலுக்கு வந்தன.

கூட்டாட்சி நிர்ணய சபை (Federal Convention) கூடிக் குடியேற்ற நாட்டுப் பிரமுகர்கள் அனைவரும் அதில் அங்கத்தினர்களாய்ச் சேவை செய்தார்கள். வாஷிங்டன், பிராங்க்ளின், ஹாமில்ட்டன், மாடிசன் முதலியோர் இச்சபையில் அங்கம் வகித்தனர். இச்சபை பிலடெல்பியாவில் 1787-ல் கூடி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அரசியல் அமைப்பைத் தயார் செய்தது. இராச்சியச் சட்ட சபைகளின் அங்கீகாரம் பெற்றதும் இவ்வமைப்பு 1789-ல் அமலுக்கு வந்தது.

இந்த அமைப்பே இன்றும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் அடிப்படை. இவ்வமைப்பு இதுவரை 22 முறை திருத்தப்பட்டிருக்கிறது. எனினும், இவற்றால் முக்கிய அமிசங்கள் எவைகளும் மாறவில்லை.

கூட்டாட்சி அரசாங்கம் (FederalGovernment): ஐக்கிய நாடுகளே உலகில் முதன் முதலில் தோன்றிய கூட்டாட்சி இராச்சியம். ஒரு கூட்டாட்சி இராச்சியத்தில் அதன் பொது சர்க்காரும் அதன் பல பகுதிகளில் தனித்தனி சர்க்கார்களும் உண்டு. அரசியல் அதிகாரங்களை இரண்டு சர்க்கார்களும் பகிர்ந்து கொள்ளும். இராச்சிய சர்க்கார்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களையே செலுத்தலாம். அரசியல் அதிகாரங்களை இருவிதமான சர்க்கார்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டுமாகையால் அரசியல் அமைப்பு, எழுத்து மூலமாயும், எளிதில் மாற்றக்கூடாததாகவும் இருப்பது அவசியம். மேலும், இராச்சியங்களுக்கு இடையே எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஓர் உச்சநீதி மன்றமும் கூட்டாட்சி இராச்சியங்களுக்கு அவசியம். இம்மூன்று கூட்டாட்சி அமிசங்களையும் ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்பில் காணலாம்.

அரசியல் அதிகாரப் பங்கீடு (Division of Powers) : கூட்டாட்சி சர்க்கார் ஈடுபட்டிருக்கும் பல அலுவல்களில் முக்கியமானவை வெளிநாட்டு விவகாரங்கள், போர்க்கால அமைதிக்கால சம்பந்தமான விஷயங்கள், நாணய சம்பந்தமான பிரச்சினைகள், அயல் நாட்டு வியாபாரம், கூட்டாட்சியில் அடங்கியுள்ள இராச்சியங்களிடையே வியாபாரம் வாணிபம் தொழில் முதலியவற்றை ஒழுங்கு செய்தல், தபால் தந்திகள், அளவைகள், குடிமை உரிமைகளை அளித்தல் முதலியன.

அரசியல் அமைப்பில் காணப்படும் பதினேழு அதிகாரங்களே கூட்டாட்சி சர்க்கார் இன்று செய்துவரும் எல்லா வேலைகளுக்கும் ஆதாரம். கூட்டாட்சியின் அதிகாரங்கள் விரிவாகப் பெருகியுள்ளன. முக்கியமாக வியாபாரம், போலீஸ், பிற நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்யும் அதிகாரம் முதலிய துறைகளில் கூட்டாட்சி இராச்சியத்தின் அதிகாரம் வளர்ந்துள்ளது.

அரசியல் அமைப்பால் கூட்டாட்சி சர்க்காருக்கு அளிக்கப்படாத பிற அதிகாரங்கள் எல்லாம் இராச்சியச் சட்ட சபைகளைச் சேர்ந்தவை. இது பொதுவிதி. ஆனால் இதற்கு விலக்குகள் பல உள்ளன. சில காரியங்களை இராச்சிய சர்க்கார்கள் செய்யக் கூடாதென்று அரசியல் அமைப்பு நிருணயித்துள்ளது. இவற்றுள் முக்கியமானவை:—பிற தேசங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல், உடன்படிக்கைகள் செய்தல், தளவாடங்களை வைத்துக்கொள்ளுதல், நாணயம் அச்சடித்தல், ஏற்றுமதிகள் இறக்குமதிகளின் பேரில் வரிகள் விதித்தல், உண்டியல்கள் கொடுத்தல் முதலியன. இக்கட்டுப்பாடுகளின் நோக்கம் கூட்டாட்சி சர்க்காரின் அதிகாரத்திற்குக் கேடு ஏற்படாமல் காப்பதேயாகும்.

குடிமை உரிமைகளைக் காப்பாற்றும் நிமித்தம் கூட்டாட்சி சர்க்காரும் இராச்சிய சர்க்கார்களும் மக்களின் உரிமைகள் சம்பந்தமான பல வகையான சட்டங்களைச் செய்யக்கூடாதென அரசியல் அமைப்பு விதித்துள்ளது. சட்ட சபைகள் ஆட்கொணர் சட்ட உரிமையைத் தாற்காலிகமாக ரத்துச் செய்யவும், மக்களுக்குச் சமமான சட்டப் பாதுகாப்பை அளிக்க மறுக்கவும், சட்ட ரீதியான வழியிலன்றி மக்களுடைய உயிர், பொருள் முதலிய உரிமைகளை நீக்கவும், அவர்களுடைய வேறு பல உரிமைகளைக் குறைக்கவும் கூடாதென அரசியல் திட்டம் வரையறை செய்துள்ளது. கூட்டாட்சி சர்க்காரும், இராச்சிய சர்க்கார்களும் இக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கின்றன.

கூட்டாட்சி சர்க்காருக்கும், இராச்சிய சர்க்கார்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தனி அதிகாரங்கள் (Exclu- sive powers) தவிர, அவை இரண்டிற்கும் கூட்டு அதிகாரங்கள் (Concurrent powers) பல உண்டு. வரிகள் விதித்தல், கடன் வாங்குதல், கம்பெனிகள், பாங்குகள் முதலிய ஸ்தாபனங்களைப் பதிவுசெய்தல், வாணிபம், தொழில் சம்பந்தமான விதிகள் செய்தல், சமூகப் பாதுகாவலுக்கு (Social security) வேண்டியன செய்தல் முதலியன இவ்வகுப்பைச் சேர்ந்தவையாகும்.

கூட்டாட்சி சர்க்காரின் அமைப்பு : நீதிப் பகுதி, நிருவாகப் பகுதி, சட்ட சபைப் பகுதி என்னும் அரசியலின் மூன்று உறுப்புக்களைப் பிரித்து, வெவ்வேறு அதிகாரிகள் வசம் ஒப்படைப்பது அமெரிக்க அரசியல் அமைப்பின் அடிப்படையான கொள்கை, இவை ஒன்றோடொன்று தொடர்பின்றிச் சுயேச்சையுடன் வேலை