பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கஸ் வெஸ்பூசியஸ்

130

அமெரிக்கா

அமெரிக்காவிலேயே சீடர்கள் இருக்கின்றனர். இப்போது மக்கள் நலக்கொள்கை (Humanism), ஜனநாயகம் (Democracy) ஆகியவற்றையே அறிஞர்கள் மிகுதியாக வற்புறுத்துகிறார்கள், பொருளாதாரமும் தத்துவ அடிநிலை பெறவேண்டும் என்று எண்ணிய போதிலும், மார்க்சியத் தத்துவக் கொள்கையை ஆதரிக்கவில்லை, கீழ்நாட்டுத் தத்துவ சாஸ்திரத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் மிகுந்து வருகிறது. கல்வித் துறையும் தத்துவ அடிநிலை பெறுமாறு செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அமெரிக்கரிடையே வேரூன்றியுள்ள புறவழியுண்மைக் கொள்கை தளர்ச்சி பெற்று வருகின்றது.

அமெரிக்காவில் சங்கரர், கான்ட் போன்ற தத்துவப் பேரறிஞர்கள் தோன்றவில்லை. ஆனால் இத்துறையில் இத்தகைய பெருமையைப் பெறாத நாடு அமெரிக்கா மட்டும் அன்று என்பதையும் குறிப்பிட வேண்டும். கு. எப். லை.

அமெரிக்கஸ் வெஸ்பூசியஸ் (ஆமெரிகோ வெஸ்பூச்சி) (Amerigo Vespucci 1452-1512) இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலோட்டி. 1497 க்கும் 1504 க்கும் இடையே நான்கு முறை கடல் கடந்து கப்பற் பயணம் செய்தவன் ; இருமுறை ஸ்பெயினிற்காகவும், இருமுறை போர்ச்சுகலுக்காகவும் சென்றான். இவன் தன் வாழ்க்கைக் குறிப்புக்களையும் எழுதி வைத்துள்ளான். கொலம்பஸ் 1492லேயே அமெரிக்காவை அடைந்தானாயினும், அவனுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கண்டத்தைக் கண்டுபிடித்த வெஸ்பூசியஸ்தான் அது ஒரு புதிய கண்டம் என்றும், கொலம்பஸ் நினைத்தபடி அது இந்தியா அன்று என்றும் கூறியவன். ஆதலால் இவன் பெயரே அக்கண்டத்திற்கும் இடப்பட்டு, அமெரிக்கா என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா : மேற்கு அர்த்தகோளத்தின் நிலப்பரப்பின் பெரும் பகுதி இப் பொதுப்பெயரால் வழங்குகிறது. இந் நிலப்பரப்பிற்கு 16 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வந்துள்ளது. இது ஏறக்குறைய முக்கோண வடிவுள்ள இரு நிலப்பரப்புக்களை உடையது. இவ் விரு நிலப்பரப்புக்களையும் பானமா பூசந்தி இணைக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இவற்றை அடுத்துள்ள தீவுகள் ஆகியவற்றின் மொத்தப் பரப்பு சு. 1,60,00,000 ச. மைல்.

புவியியல் அமைப்பில் இவ் விரு கண்டங்களும் பலவகைகளில் ஒத்துள்ளன. இரு கண்டங்களிலும் வட கிழக்கில் பழங்கால அடிப்படைப் பாறைகள் காணப்படுகின்றன. தென் கிழக்கிலுள்ள மேட்டு நிலங்கள் இரு கண்டங்களிலும் நிலப்பரப்பு அண்மையில் உயர்ந்தெழுந்ததால் தோன் றியவை. இவற்றில் கடற்கரையோரமாகப் படிகப் பாறைகளும், உட்புறத்தில் விகாரமடைந்த பழம்பிராணி யுகப் பாறைகளும் காணப்படுகின்றன. புவியின் மேற்பொருக்கில் நிகழ்ந்த மடிப்புக்களும் எரிமலை இயக்கமும் தோற்றுவித்திருக்கும் உயரிய மலைகள் இக்கண்டங்களின் மேற்கே உள்ளன. மேடுகளின் இடையில் மையத்தில் ஒன்று சேரும் தாழ் நிலங்கள் இரு கண்டங்களிலும் உள்ளன. இவ்விரு கண்டங்களும் ஒரேவகையான புவியியல் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பதை இவ்வொற்றுமைகள் தெளிவாக்குகின்றன. கிழக்கு அர்த்தகோளத்தின் மேற்கு விளிம்பும், அமெரிக்கக் கண்டங்களின் கிழக்கு விளிம்பும் வடிவத்திலும் புவியியல் அமைப்பிலும் ஒத் திருப்பது, ஒரே நிலப்பரப்பாக இருந்த பெருங் கண்டத்

என்ற திலிருந்து ஒரு பகுதி பிரிந்து, மேற்கு நோக்கிச் சென்று இக்கண்டங்களாகியது என்ற கொள்கைக்கு இடந்தருகிறது.

வட அமெரிக்காவில் பிரிட்டனுக்குச் சொந்தமான கானடா பிரிட்டிஷ் வட அமெரிக்கா என்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கே, 19 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் வென்று, இக்காலத்தில் பல இராச்சியங்களாகப் பிரிந்துள்ள பிரதேசம் லத்தீன் அமெரிக்கா என்றும், மெக்சிகோவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள நாடுகள் மத்திய அமெரிக்கா என்றும் அழைக்கப் பெறுகின்றன.

(வட அமெரிக்காவைப் பற்றியும், தென் அமெரிக்காவைப் பற்றியும் தனிக் கட்டுரைகள் பார்க்க. முக்கியமான அமெரிக்க நாடுகளுக்கும் தனிக் குறிப்புக்கள் பார்க்க.)

அமெரிக்க ஆதிவரலாறு : 'புதிய உலகம்' என்று சொல்லப்படும் மேற்கு அர்த்தகோளம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு கண்டங்கள் கொண்டது. 1492 ஆம் ஆண்டு, கொலம்பஸ் அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள சில தீவுகளைக் கண்டுபிடித்தபோது, அவற்றை இந்தியாவின் ஒரு பாகமெனக் கருதினான் ; ஆகவே, தான் கண்ட மக்களை இந்தியர் என்று அழைத்தான். ஆனால் ஆமெரிகோ வெஸ்பூச்சி இத்தாலிய மாலுமிதான் கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புதிய உலகமென்று கூறினான். ஆகவே அவ்வுலகம் 'அமெரிக்கா' என்று அவன் பேரால் அழைக்கப்பட்டது. இவ்வாறு பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அமெரிக்கா என்று அக்கண்டம் பெயர் பெற்றது.

அமெரிக்காக் கண்டங்களின் பழங்கால மக்கள் ஆசியாக் கண்டத்து மக்களென்றும், அந்தக் கண்டத்தின் வட கிழக்குப் பாகத்திலிருந்து பேரிங் ஜலசந்தி வழியாக வட அமெரிக்காவில் குடிபுகுந்தனரென்றும், இவர்கள் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறமுடைய மக்களாக இருந்தன ரென்றும் பழங்கால வரலாற்றுச் சின்னங்களிலிருந்து தெரிகிறது. ஆதியில் மனித குலமே அமெரிக்காக் கண்டங்களில் தோன்றவில்லை யென்று அறிகிறோம். அக்கண்டங்களில் பழங்காலத்தில் காணப்பட்ட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தனரென்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆனால், எங்கிருந்து எவ்வழியாக அமெரிக்காவில் குடிபுகுந்தனர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அட்லான்டிக் கடலின் வடபாகத்திலுள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, லாப்ரடார் வழியாக ஆசியாக் கண்டத்து மக்கள் அமெரிக்காவின் வடபாகத்தில் குடியேறி இருக்கலாமென்று சிலர் கருதுகின்றனர். ஏனெனில் அவ்வழியாகத்தான் லைப் எரிக்சன் (Leif Ericson) என்பவன் கி. பி. பத்தாவது நூற்றாண்டில் ஐரோப்பாவின் வடபாகத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் வடபாகத்தை அடைந்தான். ஆனால், அது பனி உறைந்து கிடக்கும் கடினமான வழியாக இருந்தபடியால், பழங்கால மனிதர் அப்பாதை வழியாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்திருக்க முடியாது.

இப்பொழுது அட்லான்டிக் சமுத்திரமாக இருக்கும் கடல், பழைய காலத்தில் அட்லான்டிஸ் (Atlantis) என்ற ஒரு நிலப்பரப்பாக இருந்ததெனப் பிளேட்டோ என்னும் கிரேக்க அறிஞர் கூறுவதால், ஆசிய மக்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து, இந்த அட்லான்டிஸ் நிலப்பரப்பின் வழியாகத் தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் குடியேறியிருக்கலா மென்று சிலர்